/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.புதுாரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்
/
எஸ்.புதுாரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்
ADDED : ஜூலை 16, 2025 06:55 AM

எஸ்.புதுார்; எஸ்.புதுார் அருகே வாராப்பூரில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாமை அமைச்சர்பெரியகருப்பன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் நேற்று 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தொடங்கப்பட்டது. எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூரில் நடந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர்பொற்கொடி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அவர் பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழக அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, மக்களுடன் முதல்வர், மக்கள் தொடர்பு முகாம், முதல்வரின் முகவரி, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட முகாம் நடத்தபடுகிறது.
தற்போது பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி தங்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டு, வரும் செப்.,2025வரை தமிழகம் முழுவதும் 10,000முகாம் நடைபெறவுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும், நான்கு நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 முகாம் வீதம் மொத்தம்215முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதில், நகர்ப்புறங்களில் 13 துறைகளின் மூலம் 43 சேவைகளும், கிராமப்புறங்களில் 15 துறைகளின் மூலம் 46 சேவைகளும் வழங்கப்படவுள்ளது.
குறிப்பாக மகளிர் உரிமைத்திட்டத்தில் மனு அளித்திட விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகள், இம்முகாம்களில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு மனு அளிக்கலாம். மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும், என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்அரவிந்த், தாசில்தார் நாகநாதன், பி.டி.ஓ., க்கள்செழியன்,லெட்சுமணராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

