UPDATED : அக் 13, 2026 04:10 PM
ADDED : அக் 13, 2026 03:44 PM

திருப்புவனம்: திருப்புவனம் வழியாக செல்லும் பஸ்களில் பயணிக்கும் திருட்டு கும்பலால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.
மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், ஏர்வாடி , ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினசரி இயக்கப்படுகின்றன.
தொலை துார பஸ்களில் திருட்டுக் கும்பல் உள்ள சிலர் கையில் குழந்தைகளுடன் உலா வருகின்றனர். பஸ்சில் பயணம் செய்யும் பெண்கள், முதியோர்களை குறி வைத்து அவர்கள் அருகே பயணம் செய்வதுடன் அவர்களிடம் பேச்சுக்கொடுத்து நகை, பணம் , அலைபேசி உள்ளிட்டவற்றை திருடி விட்டு தப்பி விடுகின்றனர்.
ராமேஸ்வரம், ராமநாதபுரம், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் வியாபாரிகள் பலரும் மதுரைக்கு சரக்கு வாங்க பஸ்களில் பணத்துடன் செல்வது வழக்கம், இவர்களை குறிவைத்தும் திருட்டு கும்பல் கை வரிசை காட்டி வருகிறது. மதுரையில் இருந்து ஏறும் கும்பல் டிக்கெட் எடுத்த ஊரில் இறங்காமல் முன் கூட்டியே இறங்கி விடுகிறது. பஸ்சில் அதிக பணம் ,நகையுடன் வருபவர்களை கணித்து அவர்களிடம் அபகரித்து விட்டு தப்பி விடுகின்றனர்.
பஸ்களில் திருட்டு நடந்தால் இறங்கும் போது தான் திருட்டு நடந்ததே தெரியவருகிறது. எனவே எந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பது என குழப்பம் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கமுதியில் இருந்து திருப்புவனம் வந்த புஷ்பவள்ளி என்பவரின் பையில் இருந்த ஒன்பது பவுன் தங்க நகையை சில பெண்கள் திருடி விட்டு தப்பினர்.
தொலை தூர பஸ்களில் உலா வரும் திருட்டு கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து பயணிகளின் அச்சத்தை போக்க வேண்டும்.
