/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விழா குளறுபடியால் மாணவர்கள் அலைக்கழிப்பு; அதிருப்தியில் ஆசிரியர்கள், பெற்றோர்
/
விழா குளறுபடியால் மாணவர்கள் அலைக்கழிப்பு; அதிருப்தியில் ஆசிரியர்கள், பெற்றோர்
விழா குளறுபடியால் மாணவர்கள் அலைக்கழிப்பு; அதிருப்தியில் ஆசிரியர்கள், பெற்றோர்
விழா குளறுபடியால் மாணவர்கள் அலைக்கழிப்பு; அதிருப்தியில் ஆசிரியர்கள், பெற்றோர்
ADDED : நவ 13, 2024 09:29 PM
சிங்கம்புணரி ; அரசுப் பள்ளிகளில் நடக்கும் விழா நேர குளறுபடியால் மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக பெற்றோர்கள் குமுறுகின்றனர்.
இத்தாலுகாவில் எஸ்.புதுார், சிங்கம்புணரி ஒன்றிய மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்று மாணவர்களிடம் உரையாடி சைக்கிளை வழங்கி வருகின்றனர். பயண அட்டவணைப்படி ஒவ்வொரு பள்ளியிலும் விழா முடிய அறிவிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் ஆவதால், அட்டவணைப்படி கடைசி பள்ளி மாணவர்கள் இருட்டில் வீடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
நவ. 11ல் உலகம்பட்டியில் மாலை 6:00 மணிக்கு மேல் மாணவர்கள் காற்று இல்லா சைக்கிள்களை தள்ளிக்கொண்டு இருட்டில் வீடுகளுக்கு சென்றனர். நவம்பர் 12ல் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதியம் 3:00 மணிக்கு விழா என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 6:30 மணிக்கு மேல் தான் சைக்கிள் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவர்கள் நீண்ட நேரம் பள்ளியில் காத்திருந்தனர். மேலும் நிகழ்ச்சி முடிந்து சைக்கிள்களை இருட்டில் கிராமங்களுக்கு தள்ளி சென்றனர்.
மாணவிகள் வீடு திரும்ப நேரம் ஆனதை தொடர்ந்து பெற்றோர்கள் பதற்றத்திற்கு உள்ளாகினர். பல்வேறு இடங்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். பலர் நேரில் வந்து மாணவிகளை அழைத்துச் சென்றனர். பணி முடித்து வெளியூர்களுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கும் சிரமம் உண்டானது. எனவே பள்ளிகளில் விழாக்களை ஏற்பாடு செய்யும் போது குறித்த நேரத்தில் துவங்கி பள்ளி முடிவடையும் நேரத்திற்கு முன்பாகவே முடிக்க பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

