/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் ககன்யான் திட்டத்திற்கு உறுதுணை: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேச்சு
/
சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் ககன்யான் திட்டத்திற்கு உறுதுணை: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேச்சு
சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் ககன்யான் திட்டத்திற்கு உறுதுணை: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேச்சு
சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் ககன்யான் திட்டத்திற்கு உறுதுணை: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேச்சு
ADDED : ஆக 19, 2025 01:19 AM

காரைக்குடி; ''இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பியது, ககன்யான் திட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும்,'' என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடந்த 36வது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:
கொரோனா காலத்தில் பிரதமர் மோடி மற்ற நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டார்.
தொடக்கத்தில், அமெரிக்கா ஒத்துழைப்போடு தான் செயற்கைகோள் அனுப்பப்பட்டது. ஆனால், இஸ்ரோ இதுவரை 34 நாடுகளுக்குரிய 433 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை செய்துள்ளது. சிந்துார் ஆப்பரேஷனில் செயற்கைக்கோள் பயன்பாடு மிகவும் சிறப்பாக உதவியது. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பியது நாம் தான். நிலவை, முதன் முதலில் சிறந்த புகைப்படம் எடுத்தது நமது தொழில்நுட்பத்தில் தான்.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பியது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இது மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும். கடந்த மாதம் ஜி.எஸ்.எல்.வி. எப் 16- நிசார் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய வானுார்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் இணைந்து உருவாக்கிய உலக தரம் வாய்ந்த செயற்கைக்கோள்.
எதிர்காலத்தில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பசுமைப் புரட்சி மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம். கல்வி அறிவு 79.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொடக்கப்பள்ளிகள் 8.40 லட்சமாக உயர்ந்துள்ளன. சுதந்திரம் பெற்ற போது, ரூ. 2.7 லட்சம் கோடியாக இருந்த உள்நாட்டு உற்பத்தி இன்று ரூ.135.13 லட்சம் கோடியாக உயர்ந்து, பிரிட்டனைவிட முன்னேறி 4வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. 2031க்குள் 3வது பொருளாதார நாடாக மாறும். இந்திய ரயில் பாதைகள் உலகில் மிகப்பெரியது. சாலை பாதைகள்6.4 மில்லியன் கி.மீ., ஆக உயர்ந்துள்ளது. அணு மின் துறையில் 23 அணு உலைகள் மூலம் 8180 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
2040ல் இந்தியா விண்வெளியில் முதன்மை நாடாக மாறும் என்றார்.

