/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
/
திருப்புவனத்தில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
ADDED : அக் 21, 2024 05:07 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே ஏனாதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
திருப்புவனம் அருகே ஏனாதியை ஒட்டி சுமார் 200 ஏக்கரில் ஐ.ஆர் 20., என்.எல்.ஆர்., கோ50, கோ 51 உள்ளிட்ட நெல் ரகங்களை மழையை நம்பி பயிரிட்டுள்ளனர்.
நாற்றங்கால் அமைத்து 40 நாட்கள் கழித்து நாற்று பறித்து நடவு செய்வது வழக்கம். இந்தாண்டு ஆகஸ்ட் கடைசியில் நாற்றங்கால் அமைத்து, கடந்த வாரம் நெல் நடவு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கண்மாய் பாசனத்தை நம்பியே இருப்பதால் கண்மாய் தண்ணீரை விவசாய நிலத்திற்கு பாய்ச்சுவதற்கு வசதியாக ஆங்காங்கே டீசல் இன்ஜின்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
பூவந்தி கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் மடப்புரம் கண்மாய் வழியாக ஏனாதி கண்மாய்க்கு வரும். ஏனாதி கண்மாய்க்கு வரும் தண்ணீரை அப்படியே பாப்பாகுடி கண்மாய்க்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து விடுவார்கள்.
இந்தாண்டு பூவந்தி, மடப்புரம் கண்மாய்கள் நிறைந்து பத்து நாட்களுக்கு மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாப்பாகுடி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்படவே இல்லை.
இதனால் வரும் தண்ணீர் அப்படியே விவசாய நிலங்களை மூழ்கடித்து வருகிறது.
இரு நாட்களில் விவசாய நிலங்களில் சுமார் மூன்று அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
தற்போது 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் தொடர்ச்சியாக வரும் தண்ணீரால் மேலும் விவசாய நிலங்கள் மூழ்கி வருகின்றன.
ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்ட நிலையில் நெல் நாற்றுகள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
நீரில் மூழ்கும் டீசல் இன்ஜின்கள்:
இது குறித்து விவசாயி அய்யங்காளை கூறியதாவது: எங்கள் கண்மாயை ஒட்டி உள்ள பகுதிகளில் சுமார் 136 ஏக்கரை வருவாய்த்துறையினர் நீர்பிடிப்பு பகுதி என ஆவணங்களில் மாற்றி விட்டனர்.
பரம்பரை பரம்பரையாக பட்டா வைத்து விவசாயம் செய்கிறோம். நீர்பிடிப்பு பகுதி என கூறி அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. விவசாயம் பாதிப்பதோடு, டீசல் இன்ஜின்களும் நீரில் மூழ்கிவிட்டன.
நீர்ப்பிடிப்பு பகுதி என்பதை மாற்றி பழைய முறைப்படி விவசாய நிலம் என அறிவித்தாலே மழை காலங்களில் ஏற்படும் நஷ்டத்தை காப்பீடு மூலம் சரி செய்யலாம், என்றார்.