/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நீரில் மூழ்கிய அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள்
/
நீரில் மூழ்கிய அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள்
ADDED : டிச 16, 2024 06:39 AM

திருப்பாச்சேத்தி: தொடர் மழை காரணமாக திருப்பாச்சேத்தியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பாச்சேத்தி,கல்லுாரணி, அழகாபுரி, மிக்கேல்பட்டினம், வேம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.என்.ஆர்., என்.எல்.ஆர்., கோ 50, கோ51, அண்ணா ஆர்4 உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையை நம்பி செப்டம்பரில் நெல் நடவு செய்த விவசாயிகள் கிணற்று பாசனத்தை நம்பி நெல் விளைவித்துள்ளனர். பம்ப்செட் நீரை பயன்படுத்தி நடவு செய்துள்ள நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
மழை நின்ற உடன் நெற்பயிர்களை அறுவடை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் வயலில் இருந்த மழை நீர்வடியவே இல்லை.
கண்மாய் பாசனத்தை நம்பி நெல் நடவுபணியில் ஈடுபடும் விவசாயிகளுக்காக கால்வாயில் தொடர்ச்சியாக தண்ணீர் செல்வதால் வயல்களில் இருந்த தண்ணீர் வடியாமல் அப்படியே உள்ளது. ஐந்து நாட்களுக்கும் மேலாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
அழகாபுரி விவசாயிகள் கூறுகையில்: கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு செய்து அறுவடைக்கு தயார் நிலையில் மழை காரணமாக நெற்பயிர்கள் சாய்ந்து முளை விட தொடங்கியுள்ளன. ஏக்கருக்கு 30 முதல் 40 மூடைகள் வரை கிடைக்க வாய்ப்பிருந்தது.
மழையால் நான்கு மாத உழைப்பு, வாங்கிய கடன் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாத கடைசியில் அறுவடை முடித்து மீண்டும் இரண்டாம் போக பயிரிட திட்டமிட்டிருந்தோம், மழையால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கல்லுாரணி, அழகாபுரி, மிக்கேல்பட்டினம், வேம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 35 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சென்றுள்ளனர்,இழப்பீடு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை, என்றனர்.