/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விதைப்பண்ணை அமைக்க மானியம் உதவி இயக்குனர் தகவல்
/
விதைப்பண்ணை அமைக்க மானியம் உதவி இயக்குனர் தகவல்
ADDED : நவ 11, 2024 04:18 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மானியத்துடன் விதைப்பண்ணை அமைக்க விவசாயிகள் முன்வரவேண்டும் என விதை, உரிமச்சான்று உதவி இயக்குனர் சி.சக்திகணேஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் விதைப்பண்ணை அமைக்க தேவையான வல்லுநர் விதை, ஆதாரநிலை மற்றும் சான்று நிலை நெல் விதைகளை வட்டார விரிவாக்க மையங்களில் பெறலாம். கோ 55, ஏ.டி.டீ., 57 போன்ற குறுகிய கால விதை ரகங்கள் மற்றும் டி.கே.எம்., 13, என்.எல்.ஆர்.,34449, ஜே.ஜி.எல்.,1798, பி.பி.டி., 5204 போன்ற மத்திய கால விதை ரகங்களை தேர்வு செய்யலாம். விதைகளை வாங்கும்போது காலாவதி தேதி பார்த்து வாங்கவும். விற்பனை ரசீது மற்றும் சான்று அட்டைகள் ஆகியவற்றை விதைப்பு அறிக்கையுடன் வேளாண்மை உதவி இயக்குனர் மூலம் பதிவு செய்திடல் வேண்டும்.
விதைப்பண்ணை அமைக்க விதைச்சான்று கட்டணம் ஏக்கருக்கு பதிவு கட்டணம் ரூ.25, வயலாய்வு கட்டணம் ரூ.100, விதை பரிசோதனைக்கு ரூ.80 செலுத்த வேண்டும். விதைத்த 35 வது நாள் அல்லது பயிர் பூப்பதற்கு 15 நாட்களுக்கு முன் இதில் முன்னதாக பதிவு செய்ய வேண்டும். விதை பண்ணையில் இருவேறு பகுதிகள் 50 மீ., களுக்கு அதிக இடைவெளியில் இருந்தாலோ, விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாப்பட்டாலோ தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த விதைப்பண்ணைகள் விதை சான்று அலுவலர்களால் உரிய காலங்களில் வயலாய்வு மேற்கொண்டு, கலவன்கள் அகற்றப்பட்டு, பயிரின் வளர்ச்சி கண்காணிக்கப்படுவதால் தரமான விதை உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு கலவனற்ற, இனத்துாய்மை உள்ள விதை பண்ணைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் விதைகளுக்கு கொள்முதல் மற்றும் விற்பனை மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி பலன் பெறலாம். இது தவிர சிறுதானியங்களான குதிரைவாலி, கேழ்வரகு, பயறு வகைகளான உளுந்து, பாசிப்பயறு, எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள் ஆகிய ரகங்களில் விதைப்பண்ணை அமைக்க இருக்கும் விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம், என்றார்.