/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விசாரணைக்கு ஆஜரான சஸ்பெண்ட் டி.எஸ்.பி.,
/
விசாரணைக்கு ஆஜரான சஸ்பெண்ட் டி.எஸ்.பி.,
ADDED : ஜூலை 06, 2025 02:49 AM
திருப்புவனம்:திருப்புவனத்தில் நீதிபதி விசாரணைக்கு வந்த சஸ்பெண்ட் டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கருத்து சொல்ல மறுத்து ஆட்டோவில் ஏறிச்சென்றார்.
ஜூன் 28ம் தேதி மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின் போது பத்ரகாளியம்மன் கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் 29, அடித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் உத்தரவுப்படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் 4வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார். போலீசார், கோயில் ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் நேற்று காலை 10:00 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார். மதியம் 12:25 மணிக்கு விசாரணை முடிந்து வெளியே வந்தவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க வேகமாக ரோட்டில் சென்ற ஆட்டோவை மறித்து ஏறி சென்றார்.
மூடி மறைக்க முயன்ற அரசு
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் கூறியதாவது: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை, ரவுடிகளின் ஆட்சி நடைபெறுகிறது. காவல் துறையினர் மனித மிருகங்களாக மாறி வருகின்றனர் என ஆளும் கட்சி எம்.எல்.ஏ., திருச்சி இனிகோ இருதயராஜ் பகிரங்கமாக குற்றம் சாட்டும் அளவிற்கு ஆட்சி நடைபெறுகிறது.
அஜித்குமார் சம்பவத்தை மூடி மறைக்கவே அரசு முயன்றது. உயர்நீதிமன்றத்தின் தலையீடு, போலீசார் தாக்கும் வீடியோ வெளி வந்தது போன்றவை தி.மு.க., அரசின் அராஜகங்களை வெளியே கொண்டு வந்துள்ளது என்றார்.