/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சரணாலய கிராமத்தினருக்கு 'ஸ்வீட் பாக்ஸ்' வழங்கல்
/
சரணாலய கிராமத்தினருக்கு 'ஸ்வீட் பாக்ஸ்' வழங்கல்
ADDED : அக் 19, 2025 06:02 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கொள்ளுக்குடிப்பட்டியில் சரணாலயப் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமத்தினரைப் பாராட்டி வனத்துறை சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.
திருப்புத்துாரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். அதில் கொள்ளுக்குடி கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களில் வலசை போதல் ஆக வரும் பறவைகள் கூடு கட்டி இனவிருத்தி செய்வது பல ஆண்டுகளாக தொடர்கிறது.
இந்தப் பறவைகளை யாரும் வேட்டையாடாமல் இக்கிராமத்தினர் பல ஆண்டுகளாக பாதுகாக்கின்றனர். சப்தத்தில் கூட்டிலிருந்து குஞ்சுப் பறவைகள் கண்மாய் நீருக்குள் விழுந்து விடும் என்பதற்காக தீபாவளி உள்ளிட்ட எந்த விழாக்களிலும் பட்டாசு வெடிப்பதை கிராமத்தினர் தவிர்க்கின்றனர். அத்துடன் சரணாலயம் வரும் பார்வையாளர்களுக்கு பறவைகள் பெயர் உள்ளிட்ட விபரங்களையும் சொல்லி 'கைடாக'வும் பணியாற்றுகின்றனர்.
இக்கிராமத்தினரை பாராட்டி தீபாவளியை முன்னிட்டு வனத்துறையினர் 'ஸ்வீட் பாக்ஸ்' கொடுத்து கவுரவப்படுத்துவர்.
இந்த ஆண்டு கலெக்டர் பொற்கொடி கிராமத்தினருக்கு இனிப்பு வழங்கினார். வன அலுவலர் கார்த்திகேயன், வனவர் பிரவின்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.