/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காலை சிற்றுண்டிக்கு பணியாளர்கள் நியமிக்க ஆசிரியர்கள் கோரிக்கை
/
காலை சிற்றுண்டிக்கு பணியாளர்கள் நியமிக்க ஆசிரியர்கள் கோரிக்கை
காலை சிற்றுண்டிக்கு பணியாளர்கள் நியமிக்க ஆசிரியர்கள் கோரிக்கை
காலை சிற்றுண்டிக்கு பணியாளர்கள் நியமிக்க ஆசிரியர்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 23, 2025 11:43 PM
சிவகங்கை: நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க பணியாளர்களை நியமிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 1545 அரசு தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான காலை சிற்றுண்டி முதற் காட்டமாக அரசு வழங்கியது.
இத்திட்டத்தை கூடுதலாக 433 மாநகராட்சி, நகராட்சி அரசு நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 56,160 மாணவர்களுக்கும் விரிவுபடுத்தியது.
கடந்த கல்வியாண்டில் இருந்து கிராமப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 2.50 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கியது. தொடர்ந்து தற்போது நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 15 முதல் நகர்ப்புறத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. கிராமப்பகுதி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க அரசு சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகர்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் சிற்றுண்டி வழங்க பணியாளர்களை நியமித்துவிட்டு, உதவி பெறும் பள்ளிகளில் பணியாளர்கள்வழங்காமல் பொறுப்பாசிரியர் மூலமாக வழங்க உத்தரவிட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், நகர்ப்புற பகுதிகளில் நகராட்சி சார்பாக காலை உணவு தயாரிக்கப்பட்டு காலை 7:30 மணிக்கு பள்ளிகளுக்கு வாகனம் மூலம் வழங்கப்படுகிறது.
அனுப்பப்படும் காலை சிற்றுண்டியை பள்ளியில் உள்ள பொறுப்பாசிரியர் பெற்று மாணவர்களுக்கு வழங்கி, காலை உணவு பாத்திரங்களை சுத்தம் செய்து தர வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஊரக பகுதியிலுள்ள உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்க பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நகர்ப்புறத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பொறுப்பாசிரியர்கள் பணி பாதிக்கப்படுகிறது.
எனவே நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொறுப்பாசிரியர் மேற்பார்வையில் முதல்வரின் காலை சிற்றுண்டியை மாணவர்களுக்கு வழங்க பணியாளர்களை நியமனம் செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.