/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் 65 பள்ளிகளுக்கு பூட்டு ஆசிரியர் போராட்டம் எதிரொலி
/
சிங்கம்புணரியில் 65 பள்ளிகளுக்கு பூட்டு ஆசிரியர் போராட்டம் எதிரொலி
சிங்கம்புணரியில் 65 பள்ளிகளுக்கு பூட்டு ஆசிரியர் போராட்டம் எதிரொலி
சிங்கம்புணரியில் 65 பள்ளிகளுக்கு பூட்டு ஆசிரியர் போராட்டம் எதிரொலி
ADDED : ஜூலை 17, 2025 11:25 PM

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்தில் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்திற்கு சென்றதால், 65 பள்ளிகளுக்கு பூட்டு போடப்பட்டது.
தொடக்க பள்ளி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) இரண்டு நாள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முதல் நாள் நடந்தபோராட்டத்தில் ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்றனர். இதனால், சிங்கம்புணரி ஒன்றியத்தில் 65 க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு பூட்டு போடப்பட்டன. இந்த ஒன்றியத்தில் 67 தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 201 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 179 பேர் நேற்று பள்ளிக்கு வராமல், ஒட்டு மொத்த விடுப்பில் சென்றனர். பள்ளிக்கு வந்த ஒரு சில மாணவர்களுக்கு காலை உணவு மட்டும் வழங்கி திருப்பி விட்டனர்.
ஓரிரு பள்ளிகள் மட்டுமே திறந்தநிலையில், ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் பள்ளியில் அமர்ந்திருந்து, தொடர்ந்து ஆசிரியர்கள் வராததால் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு முத்துப்பாண்டியன் கூறியதாவது, இந்த அரசு அமைந்து 4 ஆண்டான நிலையில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அமைச்சர் எங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் எடுத்த முடிவை கூட செயல்படுத்தவில்லை. பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாடு களைந்து மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.
பெண் ஆசிரியர்கள் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243 யை ரத்து செய்ய வேண்டும். இதை கண்டித்து நடந்த போராட்டத்தால் பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை, என்றார்.
இது குறித்து சிங்கம்புணரி வட்டார கல்வி அலுவலர் கருப்புச்சாமி கூறியதாவது, இந்த ஒன்றியத்தில் 79 சதவீத ஆசிரியர்கள் விடுப்பில் சென்றுவிட்டனர். தற்காலிக ஆசிரியர்களை வைத்து பள்ளிகளை திறந்தோம், என்றார்.