/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் கண்மாய்களில் உண்மையான கொள்ளளவில் நீரை சேமிக்க முடியவில்லை.
/
திருப்புத்துார் கண்மாய்களில் உண்மையான கொள்ளளவில் நீரை சேமிக்க முடியவில்லை.
திருப்புத்துார் கண்மாய்களில் உண்மையான கொள்ளளவில் நீரை சேமிக்க முடியவில்லை.
திருப்புத்துார் கண்மாய்களில் உண்மையான கொள்ளளவில் நீரை சேமிக்க முடியவில்லை.
ADDED : டிச 27, 2024 05:03 AM

இரணியூர் ஊராட்சியில் உள்ளது கீழக்காவனுார். விவசாயிகள் நிறைந்த பகுதி. ஆண்டு தோறும் காவினிக் கண்மாய் பாசனத்தில் நெல் சாகுபடி செய்கின்றனர். இக்கண்மாய் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி துார்ந்து போயுள்ளது.
கண்மாய் கரைகளிலும் முள் மரங்கள் வளர்ந்து நடக்க முடியாத அளவில் பரவியுள்ளது. அதே போல கண்மாயின் பெரிய மடையும் துார்ந்து விட்டதால் நீரை வயலுக்கு பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.
2023 ல் நுாறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் கண்மாயின் மடை புனரமைக்கப்பட்டது. வட்ட வடிவ கிணறு போன்ற அமைப்பு அகற்றப்பட்டு புதியதாக மடை கட்டப்பட்டுள்ளது. ஆனால் மடையிலிருந்து வயல்களுக்கு செல்லும் கால்வாயில் கீழச்சிவல்பட்டி -சிங்கம்புணரி செல்லும் ரோட்டிற்கு கீழே உள்ள துார்ந்து போன துாம்பை அகற்ற அனுமதி கிடைக்கவில்லை. புதிய துாம்பும் கட்டப்படவில்லை. கண்மாயில் நீர் பெருகி,புதிய மடை கட்டப்பட்டும், துாம்பு துார்ந்து போனதால் நீரை வயலுக்கு பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.
பின்னர் விவசாயிகளே தங்கள் சொந்த செலவில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் துாம்பில் அடைப்பை அகற்றி,வாய்க்கால் அமைத்து ஓரளவு நீரை பாய்ச்ச ஏற்பாடு செய்து கொண்டனர். இருப்பினும் விவசாயிகளுக்கு தேவையான அளவு நீரை வேகமாக வெளியேற்ற முடியவில்லை.
கீழக்காவனுார் வெங்கடேஷ் கூறுகையில், கண்மாயில் புதிய மடை கட்டப்பட்டுள்ளது. அதற்கான வழியை மேலும் உயர்த்தினால் நீர் அதிகமாக உள்ள நேரத்தில் மடையை எளிதாக திறக்க முடியும். மடைக்கு அருகில் கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.
மடையிலிருந்து நீர் வேகமாக வெளியேறிச் செல்ல வசதியாக ரோட்டிற்கு கீழே சிறு பாலம் அமைக்க வேண்டும்.கண்மாய் துார் வாரி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் நீர் கொள்ளளவு குறைந்து விட்டது. துார் வாரி பராமரிக்க வேண்டும்'என்றார்.
திருப்புத்துார் ஒன்றியத்தில் மழை பரவலாக பெய்தும், ஆறுகளில் நீர்வரத்து காணப்பட்டும் திருப்புத்துார் கண்மாய்களில் உண்மையான கொள்ளளவில் நீரை சேமிக்க முடியவில்லை. காரணம் பெரும்பாலான கண்மாய்களில் துார்வாரி நீண்ட காலமாகி விட்டதால் நீர் தேங்கும் பகுதி மேடாகி விட்டது. கோடைகாலங்களில் நீர் விரைவாக உறிஞ்சப்பட்டு, வறட்சி ஏற்பட்டு விடுகிறது. இதனால் அனைத்து கண்மாய்களையும் 5 ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பதை கட்டாயமாக்க வேண்டியது அவசியமாகும். மேலும் 100 நாள் திட்டப் பணி மூலம் மடை அமைப்பதில் உள்ள ' சிக்கலால்' 56 மடைகள் அனுமதியானதில் 21 கண்மாய் மடைகள் கட்டப்படவில்லை. விடுபட்ட மடைகளையும் அடுத்த மழை காலத்திற்குள் புரைமைக்க வேண்டியது அவசியமாகும்.