/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிடாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
/
பிடாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ADDED : ஏப் 17, 2025 05:41 AM

மானாமதுரை: மானாமதுரையின் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பொங்கல் விழா ஏப். 22ம் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி- சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுவதற்கு முன் மானாமதுரை எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான சித்திரை பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவிற்காக மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து உற்ஸவர் பிடாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோயிலுக்கு வந்தடைந்த பின்பு அர்ச்சகர்கள் ஹோமங்கள் வளர்த்து பூஜை செய்த பின்னர் கோயிலின் முன்புறமுள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்தை நடத்தி வைத்தனர்.
அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் போது உற்ஸவர் எல்லைப்பிடாரி அம்மன் சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் சர்வ அலங்காரங்களுடன் வீதியுலா நடைபெறும். பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை விழா வருகிற ஏப். 22ம் தேதி நடைபெற உள்ளது.