/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை
/
திருப்புவனத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை
திருப்புவனத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை
திருப்புவனத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை
ADDED : ஆக 17, 2025 10:11 PM
திருப்புவனம் : திருப்புவனம் தாலுகாவில் கிராமப்புறங்களில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு கிடைக்காததால் வேலை தேடி அதிகளவில் வெளியூர்களுக்கு இளைஞர்கள் படை எடுக்கின்றனர்.
திருப்புவனம் நகரில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 174 கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரும் வசித்து வருகின்றனர். திருப்புவனம் தாலுகாவில் வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளிலும், வைகை ஆற்றில் இருந்து நீர்வரத்து உள்ள கண்மாய்களைச் சேர்ந்த பகுதிகளிலும் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாயம் நடைபெறுகிறது. மற்ற பகுதிகளில் மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. விவசாய கூலி வேலைகளுக்கு பெரும்பாலும் இயந்திரங்களே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
நாற்று நடவு, களை எடுத்தல், வரப்பு வெட்டுதல், மருந்து தெளித்தல் உள்ளிட்டவற்றிற்கு மட்டுமே கூலி தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். திருப்புவனம் வட்டாரத்தில் வேலைவாய்ப்பு தர கூடிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. இதனால் கிராமப்புற ஆண், பெண்கள் மதுரையில் உள்ள ஜவுளி கடைகள், வெங்காயம், பூண்டு உள்ளிட்ட மொத்த வியாபார கடைகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். 1991ம் ஆண்டில் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1 லட்சத்து இரண்டாயிரத்து 5 பேர் இருந்தனர். ஆனால், 2021 கணக்கெடுப்பு படி 1 லட்சத்து 37 ஆயிரத்து 129 பேர்களாக அதிகரித்து விட்டனர். இதில் கிராமப்புறங்களில் 69,980 ஆண்கள், 67,149 பெண்கள் உள்ளனர். இங்கு பெண்களை விட அதிக எண்ணிக்கையில் ஆண்கள் உள்ளனர். ஆனால் வேலைவாய்ப்பு கிடைப்பதே அரிதாக உள்ளது. 30 வருடங்களில் 35 ஆயிரத்து 124 பேர் அதிகரித்துள்ளனர். அதற்கு ஏற்ப வேலைவாய்ப்பு என்பதே இல்லை. முழுக்க முழுக்க விவசாயம், கால்நடை வளர்ப்பையே நம்பி இருக்கின்றனர். பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப வேலைவாய்ப்பையும் அதிகரித்து இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் வெளியூர்களுக்கு கூலி வேலைக்கு பலரும் செல்ல தொடங்கியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி, பயிற்சி முகாம், வழிகாட்டல் முகாம் என எதுவுமே நடத்தப்படுவது இல்லை. இதனால் இளைஞர்கள் தடம் மாற வாய்ப்புள்ளது.