ADDED : செப் 18, 2025 06:36 AM
திருப்புவனம் : திருப்புவனம் அருகே வலையனேந்தல் கண்மாயில் இருந்த கலுங்கு மாயமானதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
வைகை ஆற்றில் இருந்து ஊற்றுக்கால்வாய் மூலம் வலையனேந்தல் கண்மாய்க்கு நீர் வரத்து உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாயை நம்பி 200 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது. வலையனேந்தல் கண்மாயை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட திறந்த வெளி மற்றும் ஆழ்துளை கிணறுகள் உள்ளன. கண்மாயில் தண்ணீர் நிரம்பினால் சுற்றுவட்டார கிணறுகளிலும் நீர் மட்டம் உயரும்.
மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலை வலையனேந்தல் கண்மாய் வழியாக செல்கிறது. சாலை பணிகளின் போது கண்மாய் கலுங்கை அகற்றி விட்டனர். மீண்டும் கலுங்கு அமைக்கப்படவில்லை. கண்மாய் நிரம்பி மறுகால் பாய கலுங்கு இல்லை. சமீபத்திய மழையால் கண்மாய்க்கு நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளது. கலுங்கு இல்லாததால் கண்மாய் நிரம்பினால் கரைகளில் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் வலையனேந்தல் கண் மாயில் கலுங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில், வலையனேந்தல் கண்மாய்க்கு ஊற்றுக்கால்வாய் மூலம் நீர்வரத்து உள்ளது. கால்வாய் மேடாகவும் வைகை ஆறு பள்ளமாகவும் இருப்பதால் வைகை அணையில் நீர் திறப்பின் போது கண்மாய்க்கு தண்ணீர் வருவது இல்லை. எனவே வலையனேந்தல் கண்மாய்க்கு ஷட்டர் அமைத்து கால்வாய் மூலம் தண்ணீர் திறக்க வேண்டும்.
சிறு பாசன கண்மாய் மராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் துார் வாரப்பட்டுள்ள நிலையில் ஷட்டர் அமைக்கப்பட்டால் கண்மாய் நிரம்ப வாய்ப்புண்டு, ஒவ்வொரு வருடமும் மழை பெய்தால் மட்டுமே கண்மாய்க்கு நீர் வரத்து உள்ளது. கண்மாய் நிரம்பாமல் இருப்பதால் ஆழ்துளை மற்றும் திறந்த வெளி கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கண்மாய் நிரம்பினால் இப்பகுதி கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தால் இருபோக விவசாயம் நடைபெற வாய்ப்புண்டு, என்றனர்.