/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
8 மாதமாக செயல் அலுவலர் பணியிடம் காலி: வளர்ச்சி பணி பாதிப்பால் பொதுமக்கள் அவதி
/
8 மாதமாக செயல் அலுவலர் பணியிடம் காலி: வளர்ச்சி பணி பாதிப்பால் பொதுமக்கள் அவதி
8 மாதமாக செயல் அலுவலர் பணியிடம் காலி: வளர்ச்சி பணி பாதிப்பால் பொதுமக்கள் அவதி
8 மாதமாக செயல் அலுவலர் பணியிடம் காலி: வளர்ச்சி பணி பாதிப்பால் பொதுமக்கள் அவதி
ADDED : மார் 11, 2025 05:06 AM
இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சியில் 8 மாதமாக செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால் வளர்ச்சி பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் 30 ஆயிரத்திற்கும்மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இளையான்குடி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 8 மாதங்களுக்கு முன்பு இங்கு செயல் அலுவலராக பணியாற்றிய கோபிநாத் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து இளையான்குடி பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் நியமனம் செய்யப்படாமல் சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலராக இருக்கும் சண்முகம் கூடுதல் பொறுப்பாக இளையான்குடி பேரூராட்சியையும் கவனித்து வருகிறார்.
தற்போது இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் விரிவடைந்து ஆங்காங்கே குடியிருப்புகள் உருவாகி வருகிறது. நிரந்தர செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குடிநீர், தெரு விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் புதிதாக வீடு கட்டுபவர்கள் பிளான் அப்ரூவல் மற்றும் பெயர் மாற்றம், இறப்பு,பிறப்பு சான்றிதழ் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் அடிக்கடி இப்பகுதியில் குழாய்கள் சேதமடைந்து குடிநீர் வினியோகம் தடைபட்டு வருகிறது. அடிக்கடி ஏற்படும் மின்தடையினால் தெருவிளக்குகளும் சேதமடைந்து வருகின்றன.
இது போன்ற முக்கியபணிகளை கவனிக்க செயல் அலுவலர் இல்லை. பொறுப்பு செயல் அலுவலர் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் வரும் நிலையில் அனைத்து பணிகளையும் செய்ய முடியாத நிலையில் ஏராளமான பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் இளையான்குடி பகுதி மக்களின் நலம் கருதி உடனடியாக நிரந்தரமாக செயல் அலுவலர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.