/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போக்குவரத்து நெரிசலால் சிங்கம்புணரி மக்கள்; வாரச்சந்தை நாட்களில் ஸ்தம்பிக்கும் ரோடுகள்
/
போக்குவரத்து நெரிசலால் சிங்கம்புணரி மக்கள்; வாரச்சந்தை நாட்களில் ஸ்தம்பிக்கும் ரோடுகள்
போக்குவரத்து நெரிசலால் சிங்கம்புணரி மக்கள்; வாரச்சந்தை நாட்களில் ஸ்தம்பிக்கும் ரோடுகள்
போக்குவரத்து நெரிசலால் சிங்கம்புணரி மக்கள்; வாரச்சந்தை நாட்களில் ஸ்தம்பிக்கும் ரோடுகள்
ADDED : பிப் 15, 2025 06:41 AM

காரைக்குடி--திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேரூராட்சியில் நான்கு ரோடு சந்திப்பை ஒட்டியே முழுக்கடை வீதியும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டது.
இப்பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொருட்டு இருபுறமும் அளவீடு செய்து குறியிடப்பட்டது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை கடைசி நேரத்தில் எந்த ஆக்கிரமிப்பையும் அகற்றாமல் கடைக்காரர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிகால் அமைக்கப்பட்டு பணி முடிக்கப்பட்டது. இதனால் சாலை விரிவடைந்தும் முழுப்பயன் மக்களுக்கு கிடைக்கவில்லை.
நான்கு ரோடு சந்திப்பை ஒட்டியே பஸ் ஸ்டாண்டும், வாரச்சந்தையும் அமைந்துள்ளது. தினமும் காலை மாலை நேரங்களில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பள்ளி, அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அனைவரும் அவதிப்படுகின்றனர். போலீசாரும் கடுமையாக செயல்பட்டும் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.
வாரச்சந்தை தினமான வியாழக்கிழமை மோசமான அளவிற்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது. நான்கு ரோட்டிலும் இருபுறமும் டூவீலர்களை நிறுத்தி விடுகின்றனர். வேங்கைப்பட்டி ரோட்டில் ஆக்கிரமிப்பு ஒருபுறம்,ரோட்டோர சந்தைக்கடைகள் மற்றொரு புறம் என ஒரு வாகனம் செல்லும் அளவிற்கு தான் இடம் உள்ளது. இதனால் காலை முதல் இரவு வரை அந்த சாலையில் 50 மீட்டரை கடக்க அரை மணி நேரம் ஆகிவிடுகிறது.
ரோடுகளில் டூவீலர்களை நிறுத்தாமல் வாரச்சந்தைக்குள் நிறுத்த முன்னாள் கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவுறுத்திய நிலையில் அது இன்று வரை பின்பற்றப்படவில்லை. கடைவீதி மட்டுமல்லாமல் பஸ் ஸ்டாண்ட், பேரூராட்சி வணிக வளாகம் என அனைத்து பகுதிகளும் டூவீலர்கள் பார்க்கிங்கால் நிரம்பி வழிகிறது. இதனால் சந்தை நாட்களில் போக்குவரத்து போலீசார் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து, நெரிசல், ஆக்கிரமிப்புகளை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதற்கட்டமாக வேங்கைப்பட்டி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாரச்சந்தை நாட்களில் டூவீலர்களை நிறுத்த தடைவிதித்து, அனைத்து ரோட்டோர கடைகளையும் சந்தை வளாகத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் வாரச்சந்தைக்குள் நிறுத்தப்படும் காய்கறி வாகனங்களை சரக்கு ஏற்றி இறக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் நகருக்கு வெளியே நிறுத்த வேண்டும். அதிகாரிகள் நெரிசல் நேரத்தில் பார்வையிட்டு மாற்று ஏற்பாடுகளை ஆய்வு செய்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.