/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் ரோட்டிற்கு வந்த வாரச்சந்தை
/
திருப்புவனத்தில் ரோட்டிற்கு வந்த வாரச்சந்தை
ADDED : ஜூன் 26, 2025 10:17 PM

திருப்புவனம்; திருப்புவனத்தில் துணை முதல்வர் உதயநிதி வருகையின் போது மட்டும் ரோட்டில் கடைகள் அமைப்பதை தடுத்த போலீசார் செவ்வாயன்று நடந்த சந்தையின் போது நெரிசல் ஏற்பட்டும் கண்டுகொள்ளவே இல்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.
திருப்புவனத்தில் வாரம் தோறும் செவ்வாயன்று வாரச்சந்தை நடைபெறும், 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்வார்கள். சிவகங்கை ரோட்டில் நடந்த சந்தையால் விபத்து ஏற்பட்டதால் சேதுபதிநகர் எதிரே தனி இடம் ஒதுக்கப்பட்டு அங்கு சந்தை நடந்து வந்தது.
கடந்த சில மாதங்களாக வியாபாரிகள் பலரும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடைகள் அமைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பஸ்கள் நகருக்குள் வருவதில்லை.
ரோட்டில் கடைகள் இருப்பதால் பொருட்கள் வாங்க வருபவர்களும் ரோட்டிலேயே நிற்கின்றனர். ரோட்டில் நடக்கும் சந்தையால் விபத்து நேரிட்டு வருவது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் போலீசார் கண்டு கொள்ளவில்லை. கடந்த 17ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திருப்புவனத்திற்கு வருகை தந்ததையடுத்து போலீசார் நிறுத்தப்பட்டு ரோட்டில் கடைகள் அமைப்பதை தடுத்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சென்று வந்தன.
செவ்வாயன்று நடந்த சந்தையின் போது போலீசார் கண்டு கொள்ளாததால் தனியார் பள்ளி தொடங்கி திருப்புவனம் நகர் வரை கடைகள் அமைத்திருந்தனர். பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் வரும் வாரங்களிலாவது ரோட்டில் கடைகள் அமைப்பதை போலீசார் தடுக்க வேண்டும்.