/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரான்மலைக்கு வருவோர் கண்காணிப்பு இல்லை: விபரீதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
/
பிரான்மலைக்கு வருவோர் கண்காணிப்பு இல்லை: விபரீதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
பிரான்மலைக்கு வருவோர் கண்காணிப்பு இல்லை: விபரீதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
பிரான்மலைக்கு வருவோர் கண்காணிப்பு இல்லை: விபரீதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
ADDED : ஆக 02, 2025 12:39 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை உச்சிக்கு சென்று வரும் சுற்றுலாப் பயணிகளை கண்காணித்து பாதுகாக்க நடவடிக்கை ஏதும் இல்லாததால் யார் வருகிறார்கள் செல்கிறார்கள் என்ற விவரம் இல்லாத நிலை உள்ளது.
சங்க இலக்கியத்தில் பாடல் பெற்றதும் பாரி ஆண்ட பறம்புமலை எனப் போற்றப்படும் இம்மலை 2,500 அடி உயரம் கொண்டது. இம்மலையில் 100க்கும் மேற்பட்ட சுனைகள் உள்ள நிலையில் அதில் பல ஆபத்தான ஆழம், வழுக்குப் பாறைகளை கொண்டதாக உள்ளது. மலை உச்சியில் பழமையான விநாயகர் கோயிலும், அதன் அருகே பாலமுருகன் கோயிலும் உள்ளன. முஸ்லிம் தர்காவும் மலையில் உள்ளது.
மலை உச்சியில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இம்மலையைப் பொறுத்தவரை அடிவாரத்தில் குறிப்பிட்ட உயரப்பகுதி தனியாருக்கு சொந்தமானதாகவும், மற்ற மலைப்பகுதி சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அடிவாரம் மற்றும் உச்சியில் உள்ள கோயில்கள் குன்றக்குடி ஆதினம் கட்டுப்பாட்டில் உள்ளன. இம்மலையில் ஆங்காங்கே பல்வேறு வன தேவதை கோயில்களும் குகைகளும் பழமையான கல் சுவர்களும் உள்ளன. வேலு நாச்சியார் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி ஒன்றும் இம்மலையில் உள்ளது. பழமையான சிவன் கோயில் இருந்ததற்கான அடையாளமாக சிவலிங்கமும், ஆவடைகளும் இம்மலையில் அதிகம் சிதைந்து போய் கிடக்கின்றன.
இம்மலை உச்சிக்குச் செல்ல பிடாரியம்மன் கோயில் அருகே செங்குத்தான மலைப்பாதை இருந்தாலும் அப்பாதையில் அனைவரும் செல்ல முடியாது. இதனால் அடிவாரத்தில் பாப்பாபட்டி அருகே தனியாருக்கு சொந்தமான மலைப்பகுதி வழியாகவே பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் சென்று வருகின்றனர். இம்மலை மட்டுமல்லாது அருகே உள்ள மலைத்தொடர்களுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர். இது தவிர 'குடி'மகன்களும் அவ்வப்போது மலைக்கு சென்று மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து போட்டு வருகின்றனர். மலையில் ஆங்காங்கே சுனைகள் பள்ளத்தாக்கு அதிகம் உள்ள நிலையில் இங்கு வந்து செல்பவர்கள் குறித்து எந்த தகவலோ, ஆவணமோ வனத்துறையிடமோ உள்ளாட்சி நிர்வாகத்திடமோ சேகரிக்கப்படுவது கிடையாது. இதனால் யார் மலைக்கு வருகிறார்கள் எங்கு செல்கிறார்கள் எப்போது திரும்புகிறார்கள் என்ற விவரம் தெரிவதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு இம்மலையில் சிலர் வெடி மருந்து தயாரிக்க பயிற்சி எடுத்து கைது செய்யப்பட்டனர், இரண்டு சிறுமிகள் சுனையில் விழுந்து இறந்தனர், இளைஞர் ஒருவர் வழி தவறிச்சென்று மறுநாள் மீட்கப்பட்டார். இதனால் இம்மலையில் கண்காணிப்பு இல்லாமல் பக்தர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. முடிந்தவரை யார் வருகிறார்கள் செல்கிறார்கள் என்பதை உள்ளூர் மக்களே கண்காணித்து வருகின்றனர். மலையிலும்,அடிவாரத்திலும் வனத்துறையினர் பணியாளர்களை நியமித்து வந்து செல்பவர்களை கண்காணிக்கவும், அவர்களின் விபரங்களை ஆவணப்படுத்தவும், தேவையான இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.