/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாய் நிரம்பியும் விவசாயத்திற்கு பயனில்லை
/
கண்மாய் நிரம்பியும் விவசாயத்திற்கு பயனில்லை
ADDED : நவ 13, 2024 09:25 PM

மானாமதுரை; மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை கண்மாயில் தண்ணீர் இருந்தும் 15 வருடங்களுக்கும் மேலாக வாய்க்கால் துார் வாரப்படாமல் உள்ளதால் 200 ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கிறது.
தெ.புதுக்கோட்டை கிராமத்தில் 170 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயை நம்பி 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெல், வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட விவசாயம் செய்யப்படுகிறது. இக்கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்தும், மழைக்காலங்களில் மழை பெய்யும் போது கண்மாய் நிரம்பி விடும் நிலையில் நான்கு மடைகள் மூலமாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இக்கண்மாயின் கடைமடை பகுதிகளுக்கு செல்லும் வாய்க்கால் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் வாய்க்காலில் குப்பை மேவி மேடாகி விட்டதால் கடைமடை பகுதிகளில் உள்ள 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் அவை தரிசாக கிடக்கும் நிலை உள்ளது. விவசாயிகள் கூறியதாவது: 5 கி.மீ துாரமுள்ள வாய்க்காலில் கடந்த 15 வருடங்களாக தண்ணீர் வரவே இல்லை.
வாய்க்காலை துார் வார வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. மழை தண்ணீர் கூட வாய்க்காலில் வராததால் வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது.
ஒவ்வொரு வருடமும் தெ.புதுக்கோட்டை கண்மாய் நிரம்பியும் விவசாயிகளுக்கு பயனின்றி உள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.