/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை அலங்கார குளத்தில் தண்ணீர் இல்லை
/
மானாமதுரை அலங்கார குளத்தில் தண்ணீர் இல்லை
ADDED : ஆக 28, 2025 05:56 AM

மானாமதுரை: மானாமதுரையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் அலங்காரகுளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு சிறிதளவு கழிவுநீர் மட்டுமே தேங்கியுள்ளதால் சிலைகளை கரைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஹிந்து முன்னணியினர், பக்தர்கள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் 205 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வைத்து வழிபடக்கூடிய விநாயகர் சிலைகளையும், வீட்டில் வைத்து வழிபட்ட சிறிய விநாயகர் சிலைகளையும் மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார குளத்தில் கரைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆனால் அந்த குளத்தில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் இல்லாமல் ஒரு இடத்தில் மட்டும் கழிவுநீர் சிறிதளவு தேங்கியுள்ளது. இந்த கழிவு நீரில் எப்படி விநாயகர் சிலைகளை கரைக்க முடியும் என ஹிந்து முன் னணி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குப்புராம் கூறியதாவது: மானாமதுரையில் புனிதம் வாய்ந்த அலங்காரகுளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென்று நீண்ட வருடமாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் குளத்திற்குள் ஆகாயத்தாமரை அதிகளவில் வளர்ந்து காணப்படுகிறது.
மேலும் இப்பகுதியில் உள்ள சிலர் நீர் வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி உள்ளதாலும், கழிவுநீரை குளத்திற்குள் விடுவதாலும் அலங்கார குளம் மிகவும் மாசடைந்து கழிவுநீர் தேங்கி முளைப்பாரிகளையும் விநாயகர் சிலைகளையும் கரைக்க முடியாததால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர். தாலுகா அலுவலகத்தில் முறையிட்டுள்ளோம் என்றார்.
தாசில்தார் கிருஷ்ணகுமார் கூறியதாவது: அலங்கார குளத்தை பார்வையிட்ட பின்னர் விநாயகர் சிலைகளை கரைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.