/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மீனாட்சி நகரில் குடிநீர் சப்ளை இல்லை
/
சிவகங்கை மீனாட்சி நகரில் குடிநீர் சப்ளை இல்லை
ADDED : ஜூலை 10, 2025 02:47 AM
சிவகங்கை: சிவகங்கை மீனாட்சி நகரில் உள்ள சாஸ்திரி 5 வது தெருவில் 3 மாதங்களுக்கும் மேல் குடிநீர் வராததால் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
சிவகங்கை மீனாட்சி நகர் சாஸ்திரி 5 வது தெருவில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நகராட்சி வழங்கிய குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சியிடம் புகார் அளித்துள்ளனர். அதை சரி செய்வதற்காக அந்த பகுதியில் செல்லக்கூடிய குடிநீர் குழாய்களின் இணைப்புகளை துண்டித்து சரிசெய்யும் பணி மேற்கொண்டனர்.
துண்டிக்கப்பட்ட இணைப்பு தற்போது வரை சரிசெய்யப்படவில்லை. 3 மாதங்களாக அந்த பகுதி மக்கள் குடிதண்ணீர் இன்றி சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். சாஸ்திரி தெரு சரவணன் கூறுகையில், எங்கள் பகுதிக்கு வரும் குடிநீரில் கழிவு நீர் கலப்பதை சரி செய்வதற்காக இங்குள் குழாய் இணைப்புகளை துண்டித்துவிட்டு பணி செய்வதாக கூறினர். 3 மாதத்திற்கும் மேலாக இந்த பகுதியில் தண்ணீர் வரவில்லை.
வாரத்திற்கு ஒருமுறை டேங்கர் லாரியில் தண்ணீர் கொடுக்கின்றனர். அதுவும் போதுமானதாக இல்லை. தினசரி குடிப்பதற்கு கேன் தண்ணீர் ரூ.30 கொடுத்து வாங்கும் சூழல் உள்ளது. நாங்களும் நகராட்சிக்கு மாதம் தோறும் குடிதண்ணீர் வரி செலுத்துகிறோம். எங்கள் பகுதிக்கு முறையாக நகராட்சி தண்ணீர் விநோகம் செய்யவேண்டும். நகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை என்றார்.
நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், சாஸ்திரி 5 தெருவில் செல்லக்கூடிய பைப் லைன் சேதம் அடைந்துள்ளது. அவற்றை மாற்ற நகராட்சி மன்ற அனுமதி பெற்று டெண்டர் வைக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்ட பிறகே பைப் லைன் மாற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றனர்.