/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாநிலம் விட்டு மாநிலம் பறக்கும் திருப்புவனம் தேங்காய்
/
மாநிலம் விட்டு மாநிலம் பறக்கும் திருப்புவனம் தேங்காய்
மாநிலம் விட்டு மாநிலம் பறக்கும் திருப்புவனம் தேங்காய்
மாநிலம் விட்டு மாநிலம் பறக்கும் திருப்புவனம் தேங்காய்
ADDED : அக் 01, 2025 09:02 AM

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் விளையும் தேங்காய் மாநிலம் விட்டு பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
திருப்புவனம் தாலுகாவில் வைகை ஆற்றை ஒட்டி இரு புறமும் கண்களுக்கு குளிர்ச்சியாக ஏராளமான தென்னந்தோப்பு உள்ளன. வைகை ஆற்றில் வருடத்திற்கு ஆறு மாதத்தில் நீர் வரத்து , நிலத்தடி நீர் மட்டம் ஆகியவற்றால் தென்னை மரங்களில் விளைச்சல் அதிக அளவில் இருக்கும், திருப்புவனம் பகுதியில் பெரும்பாலும் நெட்டை ரக மரங்களே அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. நடவு செய்த 5வது வருடத்தில் இருந்து தேங்காய்கள் காய்க்க தொடங்கும்.
45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்பட்டு அவற்றை விற்பனைக்கு அனுப்புவார்கள்.
ஒரு மரத்திற்கு வறட்சி காலங்களில் 15 முதல் 25 வரையிலும் மழை காலங்களில் 25 முதல் 40 தேங்காய்கள் வரையிலும் கிடைக்கும்.
திருப்புவனம் பகுதியில் விளையும் தேங்காய் 250 முதல் 500 கிராம் வரையிலும் எடை இருக்கும், மற்ற பகுதி தேங்காய்களை விட ருசியாகவும், எண்ணெய் சத்து மிகுந்து இருப்பதால் விரும்பி வாங்குவார்கள்.
திருப்புவனம் பகுதியில் விளையும் தேங்காய்கள் மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், குஜராத், உத்ரகாண்ட், மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகின்றன. இதற்காக திருப்புவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கிட்டங்கி அமைத்து வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து தேங்காய்கள் வாங்கி உறித்து மூடைகளில் வெளி மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.
உறிக்கப்பட்ட தேங்காய் அதிகபட்சமாக ஒரு மாதம் வரை கெடாது. பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட விழா காலங்களில் அதிகளவு தேங்காய் லோடு வெளி மாநிலங்களுக்கு செல்லும். திருப்புவனத்தில் இருந்து வாரத்திற்கு ஒரு லோடு சென்ற நிலையில் தற்போது தினசரி தேங்காய் லோடு ஏற்றிய லாரிகள் சென்ற வண்ணம் உள்ளன. சீசனை பொறுத்து தேங்காய்கள் கிலோ எட்டு ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரை விற்பனையாகும். தேங்காய் லோடு ஏற்றி செல்லும் லாரிகள் திரும்ப வரும் போது அங்கிருந்து உலர் பழங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை ஏற்றி வருவதால் லாரி தொழிலும் லாபத்துடன் இயங்கி வருகின்றன.
வியாபாரிகள் கூறுகையில்: விழா காலங்களில் தான் தேங்காய்களுக்கு அதிகம் தட்டுப்பாடு இருக்கும், திருப்புவனம் பகுதியில் இருந்து மதுரை புரோக்கர்கள் மூலம் அனுப்பி கொண்டிருந்தோம், தற்போது நாங்களே நேரடியாக அனுப்பி வருகிறோம், என்றனர்.