/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சி களம்
/
பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சி களம்
ADDED : அக் 01, 2025 09:01 AM

சிவகங்கை அருகே அம்மன்பட்டியில் மத்திய, மாநில அரசின் வழிகாட்டுதல், நிதியுதவியுடன் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் தொழில் முனைவோர் மையம் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனம் மற்றும் நபார்டு வங்கி நிதி உதவி, நேரு யுவகேந்திரா, கே.வி.ஐ.சி., ஆகிய நிதி உதவி திட்டங்களின் கீழ் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், சிவகங்கை அருகே அம்மன்பட்டியில் தொழில் முனைவோர் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தில் வீட்டில் இருந்து கொண்டே பெண்கள் வருவாய் ஈட்டும் விதமாக இலவச தையல் பயிற்சி, ஆரி மற்றும் எம்ப்ராய்டரி ஒர்க் பயிற்சி, மின் இயந்திர தையல் பயிற்சி, ேஹண்ட் எம்ப்ராய்டரி மற்றும் தேங்காய் சிரட்டையில் கைவினை பொருட்கள், சோப், பினாயில், டைல்ஸ் கிளீனிங் ஆயில், 'பொக்கே' மற்றும் சிறுதானிய சாக்லெட் தயாரிப்பு, கொரோனா காலத்தில் பாதுகாப்பான முககவசம் தயாரிப்பு உள்ளிட்ட ஏராளமான பயிற்சி கிராமப்புற பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கிராமப்புற பெண்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் மூலிகை நாப்கின், அலங்கார கார்த்திகை அகல்விளக்கு தயாரிப்பு, சணலால் ஆன தாம்பூல பை தயாரிப்பு போன்ற பயிற்சி அளிக்கப்படுகின்றன.
குறிப்பாக திருமண பெண்களை அழகூட்டும் விதமாக பிரைடல் பிளவுஸ், பிளவுசில் மிரர் (கண்ணாடி) ஒர்க், சாக்கெட் மற்றும் துணிகளில் பெயின்டிங் ஒர்க், பியூட்டிசன் உள்ளிட்ட பயிற்சி 300க்கும் மேற்பட்ட பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவாகி, சொந்தமாக தொழில் செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளனர்.
குறிப்பாக பெண்கள் தனியாக தையல் கடை நடத்த தேவையான திட்ட அறிக்கை தயாரித்து தருதல், புதிய தொழில் துவங்குவதற்கான திட்டங்கள் அனைத்தும் கற்பிக்கப் படுகிறது. இதன் மூலம் பெண்கள் முழு அளவில் தொழில் முனைவோர்களாக வளர்ந்து, தன்னை தாங்களே வளர்த்து கொண்டு, சுற்றுப்புற கிராம பெண்களையும் தொழில் முனைவோர்களாக மாற்றி வருகின்றனர்.
பெண் தொழில்முனைவோருக்கு ஆலோசனை வள்ளிமயில் கல்வி நிறுவன இயக்குனர் ஏ.எம்., கணேசன் கூறியதாவது: மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனம், வங்கி அதிகாரிகள் கண்காணிப்புடன் இங்குள்ள பெண்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கி, அவர்களுக்கு தனியாக தொழில் துவக்குவதற்கான திட்ட அறிக்கை தயாரித்தல், வங்கி கடனுதவியை பெறுவதற்கான ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதற்கு மத்திய, மாநில அரசு அதிகாரிகள், வங்கியாளர்கள் உறுதுணை புரிகின்றனர்.
குறிப்பாக அரசின் (கலைஞர்) கைவினை திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்தில் ரூ.1 முதல் 3 லட்சம் வரை கடனுதவியை மாவட்ட தொழில் மையம் மூலம் பெற்றுத்தரும் முயற்சிகளை எடுத்துள்ளோம் என்றார்.