/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் கல்வித்துறை அலுவலகத்திற்கு பூட்டு
/
திருப்புவனம் கல்வித்துறை அலுவலகத்திற்கு பூட்டு
ADDED : ஜூலை 04, 2025 07:37 AM

திருப்புவனம்; திருப்புவனத்தில் கல்வித்துறை அலுவலகம், அரசு பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு தனிநபர் பூட்டு போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளி வைகை ஆற்றின் வடகரையில் செயல்பட்டு வருகிறது. 800 மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளி எதிரே ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள விளையாட்டு மைதானத்தினுள் வட்டார கல்வி மையம் உள்ளது. அதில் 13 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அங்கு 43 பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள், பாடப்புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள், ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் அருகே மாற்று திறனாளிகள் அரசு பள்ளியும் உள்ளது.
வழக்கமாக காலை 9:00 மணிக்கு வட்டார கல்வி மையம் திறக்கப்படும் நேற்று காலை அலுவலகம் வந்த போது வெளிப்புற கேட்டில் வேறு பூட்டு போடப்பட்டிருந்து. விசாரணையில் திருப்புவனத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் 56, என்பவர் வட்டார கல்வி மைய அலுவலகத்தையும் விளையாட்டு மைதானத்தையும் பூட்டியிருப்பது தெரியவந்தது.
சொக்கலிங்கத்தின் தந்தை அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க ஒரு பகுதி நிலத்தை தானமாக வழங்கியதும், அதனை அதிகாரிகள் பதிவு செய்யாமல் வாய்மொழியாகவே பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
விளையாட்டு மைதானம் அருகில் சொக்கலிங்கத்திற்கு இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு செல்லும் பாதையை வேறு நபர் 15 வருடங்களாக ஆக்கிரமித்துள்ளார். சொக்கலிங்கம் இடத்திற்கு வருவாய்த்துறையினர் பட்டா உள்ளிட்டவை வழங்கவில்லை. அரசு பள்ளிக்கு நாங்கள் இடம் தந்துள்ளோம். என் பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காணவில்லை. எனவே தானமாக கொடுத்த இடத்தை பூட்டுகிறேன் எனக்கூறி சொக்கலிங்கம் பூட்டு போட்டுள்ளார். இது போல் ஏற்கனவே சில முறை அவர் செய்துள்ளார்.
நேற்றும் பூட்டியதால் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். சொக்கலிங்கம் ஏற்காததால் தாசில்தார் விஜயகுமார் நேரில் வந்து அவரை எச்சரித்தார். எந்த பிரச்னையாக இருந்தாலும் நேரில் வந்து புகார் செய்ய வேண்டும், அரசு அலுவலகத்தை பூட்டக்கூடாது, இனி பூட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் வட்டார கல்வி மையம் ஒரு மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டது.
அடிக்கடி இது போன்று நடக்கும் சம்பவங்களால் மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.