/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் தென்னை விவசாயிகள் அதிர்ச்சி! வெள்ளை ஈ நோயால், கருகும் மரங்கள்
/
திருப்புவனம் தென்னை விவசாயிகள் அதிர்ச்சி! வெள்ளை ஈ நோயால், கருகும் மரங்கள்
திருப்புவனம் தென்னை விவசாயிகள் அதிர்ச்சி! வெள்ளை ஈ நோயால், கருகும் மரங்கள்
திருப்புவனம் தென்னை விவசாயிகள் அதிர்ச்சி! வெள்ளை ஈ நோயால், கருகும் மரங்கள்
ADDED : ஆக 05, 2024 07:20 AM

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ க்களின் தாக்குதல் வெகுவாக பரவிவருவதால், மரங்களை வெட்டுமாறு வேளாண்மை துறையினர் ஆலோசனை தெரிவிப்பதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மடப்புரம், கானூர் பகுதிகளில் 1.5 லட்சம் தென்னை மரங்கள் வளர்க்கின்றனர். இங்கு 2 லட்சத்திற்கு மேல் இருந்த தென்னை மரங்கள் நான்கு வழிச்சாலை, அகல ரயில்பாதை பணி, ஆக்கிரமிப்பு எனக்கூறி பெரும்பாலான மரங்களை அகற்றிவிட்டனர். திருப்புவனம் பகுதியில் விளையும் தேங்காய்கள் குஜராத், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் அனுப்படுகிறது. மேலும் தென்னை மட்டைகளில் இருந்து விசிறி, கிடுகு, மூன்றுமடை தட்டி, விளக்குமாறு, பாளையில் இருந்து கயிறுகள், பிரஷ்கள் தயாரிக்கின்றனர். திருப்புவனம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மேலாக வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை மட்டைகள் காய்ந்து வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க வெள்ளை ஈ வெகு வேகமாக பரவி வருகிறது. தென்னந்தோப்புகளில் உள்ள மரங்கள் பாதிக்கப்படுவதுடன் வீடுகளில் வளர்க்கப்படும் மரங்களிலும் வெள்ளை ஈ தாக்குதல் பரவி விட்டது. மேலும் ஒரு மரத்தில் 50 மட்டைகள் இருந்தால் வெள்ளை ஈ தாக்குதலால் மட்டைகள் கருகி வருகின்றன. மரங்களில் மட்டைகள் உதிர்வதால் 50 வருடங்கள் பலன் தரகூடிய மரங்கள் காய்ப்பு திறன் இழந்து மொட்டையாக காட்சி அளிக்கின்றன. மருந்துகள் தெளித்தாலும் நோய் கட்டுப்படுத்த முடியவில்லை. வெள்ளை ஈ தாக்குதலுடன் வேர்ப்பகுதியில் பூஞ்சான் நோயும் தாக்குவதால் மரங்களின் வேர்கள் தண்ணீரை உறிஞ்சாமல் கருகி வருகின்றன. விவசாயிகளின் புகாரையடுத்து ஆய்வு செய்த வேளாண்மை அதிகாரிகள் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், மரங்களை வெட்டி விடுமாறு ஆலோசனை கூறி வருகின்றனர். இது விவசாயிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விவசாயி கர்ணன் கூறியதாவது, பல ஆண்டாக வளர்த்த மரம் கருகி மட்டைகள் உதிர்ந்து காட்சிப்பொருளாக உள்ளது. தென்னை விவசாயிகள் பலரும் தென்னை விவசாயத்தை விடுத்து மாற்று தொழிலுக்கு சென்று வருகின்றனர். நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள பல தென்னந்தோப்புகள் பிளாட்டுகளாக மாறிவிட்டன. நோய் தாக்குதலால் 40 ஆண்டுகள் பலன் தரக்கூடிய மரங்கள் கருகி நஷ்டத்தைஏற்படுத்தி வருகிறது.
.//