/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அருங்காட்சியகத்தில் பாரம்பரிய பொங்கல் விழா
/
கீழடி அருங்காட்சியகத்தில் பாரம்பரிய பொங்கல் விழா
ADDED : ஜன 15, 2024 11:08 PM

கீழடி : கீழடி அருங்காட்சியகத்தில் முதன் முதலில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கீழடியில் கடந்த 2015ல் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்த வாழ்விடங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், கால்நடை வளர்ப்பு, தொழில் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.
அதன்பின் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆறு கட்டங்களாக அகழாய்வு பணிகளில் கண்டறியப்பட்ட பொருட்கள் அனைத்தும் கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
தங்க காதணி, வரிவடிவ எழுத்துகள், உறைகிணறுகள், பாசிகள், சூதுபவளம் உள்ளிட்ட 13 ஆயிரத்து 800 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி திறக்கப்பட்ட அருங்காட்சியகத்திற்கு 11 மாதங்களில் ஐந்து லட்சம் பேர் வருகை தந்துள்ள நிலையில் நேற்று முதன் முதலாக கீழடி அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மெகா சைஸ் மண்பானையில் பொங்கல் வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
தொல்லியல் துறை இணை இயக்குனர் (கீழடி பிரிவு) ரமேஷ் தலைமையில் அருங்காட்சியக ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். பொங்கல் வைத்து வழிபட்ட பின் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கு பொங்கல் வழங்கப்பட்டது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தை கண்டு ரசித்தனர்.