/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பொங்கலுக்கு தயாராகும் பாரம்பரிய ரேக்ளா ரேஸ் வண்டி
/
பொங்கலுக்கு தயாராகும் பாரம்பரிய ரேக்ளா ரேஸ் வண்டி
ADDED : ஜன 09, 2025 05:12 AM

காரைக்குடி: செட்டிநாட்டு பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி, கைகளால் தயாராகும் பாரம்பரிய ரேக்ளா வண்டிகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உழவுத் தொழிலுக்கும், உழவுக்கு உறுதுணையாக உள்ள காளைகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெறும். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி ரேக்ளா வண்டி பந்தயத்திற்கு ரேக்ளா வண்டிகளை தயார் செய்யும் பணியில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எடை குறைவான, ஒருவர் மட்டுமே அமரக்கூடிய பாரம்பரிய ரேக்ளா வண்டிகளை தயார் செய்யும் பணியில், நேமத்தான்பட்டி அழகு சோமன் ஈடுபட்டு வருகிறார்.
அழகுசோமன் கூறுகையில்: ரேக்ளா பந்தயம் செட்டிநாட்டு பகுதியின் புகழ்பெற்ற பந்தயமாக விளங்குகிறது. பொதுவாக ரேக்ளா பந்தயம் தை தொடங்கி வைகாசி வரை நடைபெறும். ஆனால் செட்டிநாட்டு பகுதியில் எப்போதுமே ரேக்ளா பந்தயம் தான். கையால் தயார் செய்யப்படும் பாரம்பரிய ரேக்ளா வண்டிகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.
அதனாலேயே அதிநவீன காலத்திலும் பலர் கையால் உருவாகும் ரேக்ளா வண்டியை விரும்புகின்றனர். பொதுவாக ரேக்ளா வண்டி எடை குறைந்ததாகவும் வேகமாக செல்லக்கூடியதாகவும் அமைக்கப்பட வேண்டும். வண்டி தயாராக 3 மாதங்களாகும். கையால் தயார் செய்யப்படும் ஆரங்கள், சுற்றுவட்டங்களை மிகவும் பயிற்சி பெற்றவர்களே தயார் செய்ய முடியும்.
ரேக்ளா வண்டியில் கொடக்கட்டை என்ற அச்சுப் பகுதி முக்கியமானது. உரிய விதிமுறைகளின் படியே இதனை தயாரிக்க வேண்டும். 12 ஆரக்கால் நேர்த்தியான வட்ட வடிவத்தை கொடுக்கும் வகையில் கையாலேயே செதுக்கி தயாரிக்கப்படுவது சிறப்பு. 80 கிலோ எடையுடன் தயாராகும் இந்த வண்டிகள் ரூ. 50 முதல் ரூ. 60 ஆயிரம் செலவில் வேலாமரம், வாகை மரம், நாட்டு கருவேல மரம் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
அச்சு மற்றும் பேரிங் என இருவகை செய்யப்பட்டது. ரேக்ளா வண்டியில் பேரிங்க் பொருத்தி ஓட்டுவது ஆபத்தானது. நேர்த்தியான சாரதியால் மட்டுமே பேரிங் பொருத்திய வண்டிகளை கையாள முடியும். பேரிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் தயார் செய்யும் வண்டி மாடுகளுக்கும், சாரதிகளுக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. பலர் வீட்டை அலங்கரிக்கவும் ரேக்ளா ரேஸ் வண்டிகளை வாங்கி செல்கின்றனர். பாரம்பரியத்தை பறைசாற்றும் இந்த ரேக்ளா வண்டிகள் தயாரிப்பு தொழிலில் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டவில்லை.