/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் தொடரும் போக்குவரத்து குளறுபடி! பற்றாக்குறையில் டிராபிக் போலீசார் தவிப்பு
/
திருப்புத்துாரில் தொடரும் போக்குவரத்து குளறுபடி! பற்றாக்குறையில் டிராபிக் போலீசார் தவிப்பு
திருப்புத்துாரில் தொடரும் போக்குவரத்து குளறுபடி! பற்றாக்குறையில் டிராபிக் போலீசார் தவிப்பு
திருப்புத்துாரில் தொடரும் போக்குவரத்து குளறுபடி! பற்றாக்குறையில் டிராபிக் போலீசார் தவிப்பு
ADDED : ஜூலை 29, 2025 10:58 PM

திருப்புத்துார்; திருப்புத்துார் முக்கிய போக்குவரத்து மையமாகும். இங்கு மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், பொன்னமராவதி, காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், சிவகங்கை ரோடுகள் சந்திக்கின்றன. இதனால் திருப்புத்துார் நகருக்குள் வெளியூர் வாகனப்போக்குவரத்து அதிகமாக உள்ளது. புறவழிச்சாலை உள்ளதால் ஓரளவு குறைந்தாலும், உள்ளூர் வாகனங்கள் பல மடங்கு அதிகரிப்பால் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.ஆனால் அதற்கேற்ப போக்குவரத்து கண்காணிப்பு இல்லாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புத்துார் நகருக்குள் நீண்ட காலமாக அண்ணாத்துரை சிலை, பஸ் ஸ்டாண்ட் வெளியேறும் வழி அருகில் 3 ரோடு சந்திப்பு, நான்கு ரோடு சந்திப்பு மட்டுமே போக்குவரத்து சந்திப்பாக இருந்துள்ளது.
நான்கு ரோடு சந்திப்பில் 10 ஆண்டுகளுக்கு முன் சிக்னல் பொருத்தப்பட்டு இயங்கியது. ஒரு விபத்தில் சேதமடைந்த சிக்னல் பிறகு மீண்டும் பொருத்தப்படவில்லை. டிராபிக் போலீசாரும் தொடர்ச்சியாக நிற்பதில்லை.
இதனால் அப்பகுதியில் வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் உள்ளது.
அது போல் பஸ் ஸ்டாண்ட் அருகே மதுரை ரோட்டில் மூன்று ரோடு சந்திப்பிலும் சிக்னல் கிடையாது. பஸ்கள் வெளியேறும் இடத்தில் வாகன நெருக்கடி நிலவுகிறது. இந்த சந்திப்பிலும் போலீசார் பணியில் தொடர்ச்சியாக இருப்பதில்லை. இதனால் இப்பகுதியிலும் போக்குவரத்து குழப்பம் காணப்படுகிறது. பாதசாரிகள் இப்பகுதியில் கடந்து செல்வதிலும் சிரமம் உள்ளது. அண்ணாத்துரை சிலை சந்திப்பு விரிவான சந்திப்பு என்றாலும் 5 ரோடுகள் சந்திக்கின்றன. இதனால் இங்கு நிலையான போலீஸ் கண்காணிப்பும், சிக்னலும் இல்லை.
ஆக்கிரமிப்பு அதிகரிப்பு தற்போது, ரோட்டில் ஆக்கிரமிப்புகளும், அதிகரித்துள்ள உள்ளூர் வாகனங்களாலும் வாணியன்கோயில் ரோடு,-மதுரை ரோடு சந்திப்பு, சிங்கம்புணரி ரோடு முக்கு, சீதளி கீழ்கரை ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் வாகனங்கள் மோதலுக்கான வாய்ப்புள்ள சந்திப்புக்களாக உள்ளன. இவற்றிலும் கண்காணிப்பு தேவைப்படுகிறது.
போலீசார் பற்றாக்குறை மாவட்டத்தின் இரண்டாவது போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் துவக்கப்பட்ட திருப்புத்துாரில் தற்போது முழுமையான கண்காணிப்பிற்கு போதிய போலீசார் இல்லாத நிலை நீண்ட காலமாக உள்ளது.
ஒரு எஸ்.ஐ. மற்றும் 9 போலீசார் பணி புரிந்த நிலையில் தற்போது திருப்புத்துாரில் 5 போக்குவரத்து போலீசாரே உள்ளனர்.
அதிலும் சிலர் மாற்றுப்பணிக்கு சென்று விடுகின்றனர். இதனால் நகரில் போக்குவரத்து சந்திப்புக்களில் போக்குவரத்தை கண்காணிப்பதற்கு 2 அல்லது 3 போலீசாரே உள்ளனர். மாவட்ட போலீஸ் நிர்வாகம் திருப்புத்துாரில் முழுமையாக போக்குவரத்து போலீசாரை நியமித்து, முக்கிய சந்திப்புக்களில் தொடர்ந்து பணியாற்றவும், போக்குவரத்து குளறுபடியான சந்திப்புக்களில் சிக்னல் அமைக்கவும், தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.