/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவிலுக்கு டிராபிக் போலீஸ் தேவை
/
காளையார்கோவிலுக்கு டிராபிக் போலீஸ் தேவை
ADDED : ஜூன் 23, 2025 11:44 PM
சிவகங்கை: காளையார்கோவிலில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் துவக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காளையார்கோவிலை மையமாக கொண்டு 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பழமையான காளீஸ்வரன் கோயில், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றியஅலுவலகம், அரசு, தனியார் பள்ளிகள், தனியார் பொறியியல் கல்லுாரி, தனியார் டெக்ஸ்டைல் நிறுவனம், உள்ளிட்டவை செயல்படுகிறது.
இந்த பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து காளையார்கோவிலை மையமாக வைத்து நடக்கிறது.
கிராமப் பகுதியில் இருந்து வெளியூர்களில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் டூவீலரில் காளையார்கோவில் வந்து அங்கிருந்து பஸ்களில் சிவகங்கை, காரைக்குடி, கல்லல், தேவகோட்டை, மதுரை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இதன் காரணமாக போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப், கல்லல் ரோடு விலக்கு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் காலை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. திங்கள்கிழமை வாரச்சந்தை என்பதால் அந்தநாளில் சிவகங்கை தொண்டி ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்த காளையார்கோவிலுக்கு போக்குவரத்து போலீசார் கிடையாது. இங்கு போக்குவரத்து காவல் நிலையம் அமைத்து தினமும் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.