/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆத்துாரில் டிரான்ஸ்பார்மர் பழுது; தண்ணீரின்றி 250 ஏக்கர் நிலம் பாதிப்பு
/
ஆத்துாரில் டிரான்ஸ்பார்மர் பழுது; தண்ணீரின்றி 250 ஏக்கர் நிலம் பாதிப்பு
ஆத்துாரில் டிரான்ஸ்பார்மர் பழுது; தண்ணீரின்றி 250 ஏக்கர் நிலம் பாதிப்பு
ஆத்துாரில் டிரான்ஸ்பார்மர் பழுது; தண்ணீரின்றி 250 ஏக்கர் நிலம் பாதிப்பு
ADDED : நவ 13, 2024 09:24 PM

சிவகங்கை ; சிவகங்கை அருகே ஆத்துாரில் மின் டிரான்ஸ்பார்மர் பழுதானதால், 250 ஏக்கரில் நடவு செய்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி வாடி வருகின்றன.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், பொன்னாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்துார் குடிநீர் தொட்டி எதிரே 100 கே.வி., திறன் கொண்ட மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது.
இந்த டிரான்ஸ்மர் மூலம் வினியோகம் செய்யப்படும் மின்சாரத்தை, ஆத்துார், துக்கால், வீரவலசை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 250 ஏக்கர் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் 200 விவசாய மின் இணைப்புகளில் கிணற்று நீர் பாசனம் மூலம் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
பழுதான மின் டிரான்ஸ்பார்மர்
இந்நிலையில் தொடர் இடி, மின்னல் காரணமாக நவ.9ம் தேதி ஆத்துார் குடிநீர் தொட்டி எதிரே இருந்த மின் டிரான்ஸ்பார்மர் தீப்பற்றியது. இதில், டிரான்ஸ்பார்மர் முற்றிலும் சேதமானது. இதனால், அன்றில் இருந்தே, 200 மின் இணைப்புகளை பெற்ற விவசாயிகளின் மின்மோட்டார்களுக்கு, மின்சப்ளை இல்லாமல் போனது.
கடந்த 5 நாட்களுக்கும் மேலாக மின்வசதியின்றி, விவசாயிகள் நடவு செய்து 25 நாட்களே ஆன நெற்பயிர்களை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.
உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால், நெல்வயல் வறண்டு காட்சி அளிக்கின்றன. ஏக்கருக்கு ரூ.35,000 வரை செலவு செய்து நடவு செய்த நெற்பயிர்களை காப்பாற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே மின்வாரிய அதிகாரிகள், ஆத்துாரில் புதிய மின் டிரான்ஸ்பார்மர் பொருத்தி, தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டிரான்ஸ்பார்மர் ஒதுக்கீடு
சிவகங்கை மின் செயற்பொறியாளர் முருகையன் கூறியதாவது: ஆத்துாரில் பழுதான மின் டிரான்ஸ்பார்மரை அகற்றி அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய டிரான்ஸ்பார்மரும் இன்று (நேற்று) உதவி மின் பொறியாளரிடம் வழங்கிவிட்டோம். இன்றே (நேற்று) பொருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம், என்றார்.

