/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
லாடனேந்தலில் மரம் வெட்டி அகற்றம்
/
லாடனேந்தலில் மரம் வெட்டி அகற்றம்
ADDED : ஜன 02, 2025 11:54 PM

திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தலில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டதால் நேற்று நாவல் மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றினர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட போது 500க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. நகருக்குள் ஒருசில மரங்கள் மட்டுமே நிழல் தந்து வருகின்றன. லாடனேந்தல், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட ஒரு சில கிராமங்களில் தான் சாலையோரம் நிழல் தரும் மரங்கள் உள்ளன. இதில் லாடனேந்தலில் வங்கி எதிரே 40 வருடங்களை கடந்த நாவல் மரம் நிழல் தந்து வந்தது.
இதன் கிளைகள் மிகவும் தாழ்வாக இருந்ததால் எதிர் எதிரே வாகனங்கள் வரும் போது கிளைகளில் மோதி விபத்து நிகழ்ந்து வந்தன. எனவே இந்த மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். நேற்று காலை சிவகங்கையில் இருந்து ஓடாத்தூர் சென்ற அரசு டவுன் பஸ் தாழ்வாக சென்ற கிளையில் மோதியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. இதனையடுத்து பஸ் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ் மோதியதில் மரம் மேலும் தாழ்வாக சாய்ந்தது.இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று மரத்தை முழுவதுமாக வெட்டி அகற்றினர்.

