/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பு மாசு வாரியத்திற்கு தீர்ப்பாயம் எச்சரிக்கை
/
சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பு மாசு வாரியத்திற்கு தீர்ப்பாயம் எச்சரிக்கை
சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பு மாசு வாரியத்திற்கு தீர்ப்பாயம் எச்சரிக்கை
சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பு மாசு வாரியத்திற்கு தீர்ப்பாயம் எச்சரிக்கை
ADDED : நவ 21, 2024 02:44 AM
சென்னை:'தினமலர்' செய்தியை தொடர்ந்து, 'சிவகங்கை தெப்பக்குளத்தில், கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ஒரு வாரத்தில் பதில் அளிக்காவிட்டால், அதிக அபராதம் விதிக்கப்படும்' என, சிவகங்கை நகராட்சி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம், நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தெப்பக்குளத்திற்கு மழை நீர் செல்ல, வரத்து கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை பல ஆண்டுகளாக துார் வாரப்படாததால் அடைபட்டுள்ளன.
தெப்பக்குளத்தின் வடக்கு பகுதியில் உள்ள வரத்து கால்வாயில், வணிக நிறுவனங்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, கடந்த ஜனவரி 1ம் தேதி, 'தினமலர்'நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, தீர்ப்பாயம் விசாரித்தது. 'சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும், சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பது குறித்தும், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என நகராட்சி, சிவகங்கை கலெக்டர், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி தினேஷ்குமார் சிங், நிபுணர் குழு உறுப்பினர் விஜய் குல்கர்னி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
தீர்ப்பாயம் உத்தரவிட்டும், சிவகங்கை கலெக்டர், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சிவங்கை நகராட்சி ஆணையர், அறிக்கை தாக்கல் செய்யவில்லை. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாரியத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகக் கூறினார். அது தீர்ப்பாயத்தின் பார்வைக்கு வரவில்லை. நகராட்சி ஆணையர் சார்பில் அறிக்கையும் இல்லை. யாரும் ஆஜராகவும் இல்லை.
சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, அதை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், அதிக அபராதம் விதிக்க வேண்டியிருக்கும். வழக்கின் அடுத்த விசாரணை, ஜனவரி 24ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.