/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருட்டு வழக்கில் திருச்சி வாலிபர் கைது
/
திருட்டு வழக்கில் திருச்சி வாலிபர் கைது
ADDED : செப் 30, 2025 04:16 AM

சிங்கம்புணரி: பல மாவட்டங்களில் நடந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள திருடனை சிங்கம்புணரியில் பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்தவர் கொண்டையன் நெடுஞ்செழியன் மகன் கார்த்திக் என்ற குண்டு கார்த்திக் 34. இவர், வங்கிகளுக்கு பணம் எடுக்க வருபவர்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளை அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் மீது பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நேற்று சிங்கம்புணரியில் உள்ள ஒரு வங்கியில் அரசினம்பட்டியை சேர்ந்த பாலு என்பவர் பணம் எடுத்த போது அவரை கார்த்திக் நோட்டமிட்டுள்ளார். பாலு வீட்டுக்கு சென்றபோதும் பின்னால் டூவீலரில் பின்தொடர்ந்து வந்துள்ளார். சந்தேகம் அடைந்த பாலு தனது நண்பர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். கார்த்திக்கை மக்கள் பிடித்தனர். போலீசார் கார்த்திக்கிடம் விசாரணை செய்ததில், அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் அவர் இதுவரை எந்த போலீசிலும் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்ததும் தெரிந்தது. பணம் எடுத்து திரும்பிய பாலுவின் போனை திருடியதாக அவர் கொடுத்த புகாரில் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.