/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி நேரத்தில் அச்சுறுத்தும் லாரிகள்
/
பள்ளி நேரத்தில் அச்சுறுத்தும் லாரிகள்
ADDED : செப் 12, 2025 04:22 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பள்ளிக்கு மாணவர்கள் சென்று திரும்பும் நேரத்தில் இயக்கப்படும் கனரக டிப்பர் லாரிகளால் விபத்து அபாயம் நிலவுகிறது.
சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் செயல்படும் கிரசர் குவாரிகள் மற்றும் வெளியூர் குவாரிகளில் இருந்து எம் சாண்ட், பி சாண்ட் மணல், ஜல்லி கற்கள் சிங்கம்புணரி வழியாக தினமும் ஏராளமான டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரிகள் காலையில் மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லும் நேரத்திலும், மாலையில் திரும்பும் நேரத்திலும் அதிவேகத்தில் இயக்கப்படுகிறது. இதனால் சிங்கம்புணரி, வேட்டையன்பட்டி, காளாப்பூர், சதுர்வேதமங்கலம் உள்ளிட்ட பகுதி மாணவர்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.
வாகன போக்குவரத்து மக்கள் நெரிசலும் நிறைந்த நேரங்களில் அதிக சக்கரங்களை கொண்ட கனரக டிப்பர் லாரிகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது. எனவே காலை, மாலையில், பள்ளி, அலுவலகம் சென்று திரும்பும் நேரங்களில் டிப்பர் லாரிகள் நகருக்குள் வராமல் போக்குவரத்து போலீசார் தடை செய்ய வேண்டும். மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத மதியம், இரவு நேரத்தில் அவற்றை இயக்க அறிவுறுத்த வேண்டும்.