/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாட்டரசன்கோட்டையில் ஜன.,21ல் செவ்வாய் பொங்கல்
/
நாட்டரசன்கோட்டையில் ஜன.,21ல் செவ்வாய் பொங்கல்
ADDED : ஜன 16, 2025 05:00 AM
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயிலில் ஜன., 21ல் நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா நடைபெற உள்ளது.
நாட்டரசன்கோட்டையை சேர்ந்த நகரத்தார்கள் ஆண்டுதோறும் தை பொங்கலில் மாட்டு பொங்கலுக்கு அடுத்து வரும் செவ்வாய் அன்று சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கண்ணுடைய நாயகி கோயில் முன் பொங்கல் வைத்து வழிபடுவர். இந்த ஆண்டு செவ்வாய் பொங்கல் ஜன., 21 ல் நடக்கிறது. நாட்டரசன்கோட்டையை பிறப்பிடமாக கொண்ட நகரத்தார்கள் வணிகம், பணி காரணமாக வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
செவ்வாய் பொங்கல் அன்று அனைவரும் வந்து கோயில் முன் வெண் பொங்கல் வைத்து கண்ணுடைய நாயகியை வழிபடுவர். இதற்காக ஜன., 20 அன்று மாலை கோயிலில் நகரத்தார் குடும்பத்தினர் புள்ளி வாரியாக குடும்ப தலைவரின் பெயர்களை சீட்டில் எழுதி, வெள்ளி குடத்தில் போட்டு குலுக்கி எடுப்பர்.
முதல் சீட்டில் வருவோரின் பெயரை சேர்ந்த குடும்பத்தினர் தான் முதல் பொங்கல் பானை வைப்பர். இவர்கள் மட்டும் மண்பானையில் பொங்கல் வைப்பர்.
இந்த பானையில் அனைவரும் பால் ஊற்றி வணங்குவர். இதனை தொடர்ந்து மற்ற குடும்பத்தினரும் வெண் பொங்கல் வைப்பார்கள். ஜன., 21 அன்று மாலை 4:35 மணிக்கு செவ்வாய் பொங்கல் விழா கண்ணுடைய நாயகி கோயில் முன் நடைபெறும். பின் அம்மனுக்கு கிடா வெட்டி வழிபாடு நடத்துவர். நகரத்தார் மற்றும் தேவஸ்தான அலுவலர்கள் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.

