பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து சக மாணவர்கள் இருவர் கைது
பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து சக மாணவர்கள் இருவர் கைது
ADDED : ஜூலை 16, 2026 11:02 PM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மல்லல் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பிளஸ் 2 மாணவரை கத்தியால் குத்தி தப்பிய சக மாணவர்கள் இருவரை போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவர் மல்லல் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கும் சக மாணவர்களுக்கும் ஏற்கனவே விரோதம் இருந்துள்ளது.
நேற்றுமுன்தினம் பள்ளிக்கு வந்த 17 வயது மாணவரை, வகுப்பறையில் சக மாணவர்கள் இருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதில் காயமடைந்த அம்மாணவரை ஆசிரியர் உள்ளிட்டோர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.
விசாரித்த மானாமதுரை சிப்காட் போலீசார் ,தப்பிய இரு மாணவர்களை கொலை முயற்சி வழக்கில் கைது செய்து மதுரை சிறார் கண்காணிப்பு இல்லத்தில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவரை ஜூலை 6ல் சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர். அதற்கு அம்மாணவர் அவர்களை காம்பஸ் வைத்து குத்தி காயப்படுத்தியுள்ளார். இந்த ஆத்திரத்தில் பள்ளி வகுப்பறையில் வைத்து அந்த மாணவரை இருவரும் கத்தியால் குத்தியது விசாரணையில் தெரியவந்தது.
