ADDED : செப் 20, 2024 06:50 AM
இளையான்குடி: பொது நிதியிலிருந்து போதுமான நிதியை கவுன்சிலர்களுக்கு ஒதுக்காததால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. மக்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஆதங்கப்பட்டனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் விஜயகுமார், முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் தனலட்சுமி வரவேற்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட சண்முகம், முருகானந்தம்,முருகன் உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் அதிகாரிகளிடம் நாங்கள் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்காலம் முடியும் தருவாயில் செலவு கணக்குகளில் மட்டும் கையெழுத்து போடும் நிலை உள்ளது.
மக்கள் பிரச்னைகள் மற்றும் கோரிக்கை குறித்து எடுத்து கூற ஒன்றிய கூட்டத்திற்கு வந்தால் அதனை கேட்க அரசு அதிகாரிகள் வருவது கிடையாது. பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்காத காரணத்தினால் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்ய முடியாத நிலையில் அவர்களை சந்திக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று ஆதங்கப்பட்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
சண்முகம் அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்: வாணி கிராமத்தில் உள்ள பேவர் பிளாக் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது, வடக்கு அன்னக்குடியில் விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை இழுத்து விட்டு புதிய பள்ளி கட்டடம் கட்ட வேண்டும்.
கீர்த்தனா அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்: திருவள்ளூரில் தடுப்பு சுவர் அமைக்கவேண்டும், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் பொதுமக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.டி.ஓ.க்கள் விஜயக்குமார், முத்துக்குமரன்: ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.