ADDED : நவ 23, 2024 06:28 AM

கண்டவராயன்பட்டி; திருப்புத்துார் அருகே காரையூர்- கண்டவராயன்பட்டி ரோட்டில் பால வேலை நடைபெறும் பகுதியில் உறுதியான மாற்றுப்பாதை அமைக்க கிராம மக்கள் கோரியுள்ளனர்.
காரையூரிலிருந்து புதுவளவு வழியாக கண்டவராயன்பட்டி பகுதிக்கு செல்லும் 3 கி.மீ.நீளமுள்ள ரோடு முக்கியமான இணைப்பு ரோடாக உள்ளது. தினசரி பலர் இப்பகுதியில் வாகனத்தில் செல்கின்றனர். தற்போது பிரதமமந்திரி கிராமச்சாலை திட்டத்தின் கீழ் ரோடு புனரமைக்கப்பட்டு வருகிறது. அதில் புதுவளவு அருகே பாசனக் கால்வாய் பகுதியில் பாலம் அமைக்கப்படுகிறது.
இதற்காக தற்காலிக பாதை கால்வாய் வழியாக போடப்பட்டுள்ளது. ஆனால் நெகிழ்வான மண்ணாக இருப்பதால் அந்த பாதையில் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறி கீழே விழுகின்றனர்.
இரவு நேரங்களில், மழை பெய்யும் போதும் வாகன ஓட்டுனர்கள் தடுமாற வேண்டியுள்ளது. இதனால் கிராவல் அடித்து உறுதியான தளத்துடன் தற்காலிக ரோட்டை அமைக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.