/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மணல்மேட்டில் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை கட்டடம்
/
மணல்மேட்டில் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை கட்டடம்
மணல்மேட்டில் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை கட்டடம்
மணல்மேட்டில் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை கட்டடம்
ADDED : டிச 16, 2024 07:04 AM

சிவகங்கை திருப்புவனம் அருகே மணல்மேடு ரேஷன் கடைக்கான புதிய கட்டடம் திறக்கப்படாததால், பல மாதங்களாக வாடகை கட்டடத்தில் இட நெருக்கடியில் இயங்கி வருகிறது.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கே.பெத்தானேந்தல் ஊராட்சி மணல்மேடு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இக்கிராமத்தில் இடநெருக்கடியான தெருவில் வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை இயங்குகிறது.
இக்கடைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும். மழை காலத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு செல்ல முடியாத அளவிற்கு சகதியாக காட்சி அளிக்கும். இதனால் இங்கு புதிதாக ரேஷன் கடைக்கு தனியாக கட்டடம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அண்ணாமறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.9.13 லட்சத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டினர். இக்கட்டடம் கட்டி 6 மாதங்களுக்கு மேலாகியும், திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் அக்கறை காட்டவில்லை.
இதனால் கார்டுதாரர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாவட்ட நிர்வாகம் ரேஷன் கடைக்கான புதிய கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மணல்மேடு கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மணல்மேடு ராஜா கூறியதாவது: இப்பகுதியில் உள்ள 3 ரேஷன் கடைக்கு ஒரு விற்பனையாளரே உள்ளார். இதனால் மணல்மேடு கடை 2 நாட்கள் மட்டுமே திறக்கப்படும்.
அதுவும் இடநெருக்கடியான இடத்தில் கடை நடப்பதால் கார்டுதாரர்கள் சிரமம் அடைகின்றனர். ரேஷன் கடைக்கு புதிய கடை கட்டியும் திறக்கப்படாமல் இருப்பது ஏன் என தெரியாமல் உள்ளது, என்றார்.