/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை, இளையான்குடியில் செயல்படாத திட்டங்கள்
/
மானாமதுரை, இளையான்குடியில் செயல்படாத திட்டங்கள்
ADDED : ஜன 21, 2025 05:53 AM

மானாமதுரை: மானாமதுரை தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வராமல் இருப்பதால் மக்கள் ஒருவித அதிருப்தியில் உள்ளனர். வெறும் அறிவிப்போடு நிற்கும் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென் இத்தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மூடப்பட்ட சிப்காட் வளாகம்
மானாமதுரையில் தொழிற்பேட்டை ஆரம்பிக்கப்பட்டபோது ஏராளமான தொழிற்சாலைகள் இருந்த நிலையில் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். மேலும் ரூ.1800 கோடி முதலீட்டில் வீடியோகான் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் துவங்கப்பட்டது. இப்பகுதி மக்கள் பயன் பெற்று வந்தனர்.
10 வருடங்களாக ஒவ்வொரு தொழிற்சாலையும் மூடுவிழா  கண்டதை தொடர்ந்து இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் கோவை, திருப்பூர், சென்னை போன்ற நகரங்களுக்கு வேலை தேடி சென்று விட்டனர்.
மானாமதுரை சிப்காட்டில் நிரந்தரமாக செயல்படும் தொழிற்சாலைகளை துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லுாரி இல்லாத தொகுதி
மானாமதுரையில் ஏராளமான பள்ளி மாணவர்கள் படித்து வரும் நிலையில் இப்பகுதியில் அரசு கலைக் கல்லூரி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் சிவகங்கை, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டி உள்ளதால் கூடுதல் செலவு,வீண் அலைச்சல் ஏற்படுவதால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்களும்,ஆசிரியர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆகவே மானாமதுரையில் அரசு கலை கல்லூரி துவங்க வேண்டும்.
விளை பொருள் குளிரூட்டும் நிலையம்
இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட இளையான்குடி, சூராணம், முனைவென்றி சாலைக்கிராமம் உள்ளிட்ட 150க்கு மேற்பட்ட கிராமப் பகுதிகளில் குண்டு மிளகாய் விளைவிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் விலையும் குண்டு மிளகாய் அதிக காரத்தன்மையுடன் இருப்பதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
குண்டு மிளகாய்களை பாதுகாக்க குளிரூட்டும் நிலையம் இல்லாத காரணத்தினால் மிளகாய் விவசாயிகள் குண்டு மிளகாய்களை போதிய விலை வைத்து  விற்க முடியாத சூழ்நிலையில் அறுவடை காலங்களில் குறைந்த விலைக்கு விற்க நேரிடுகிறது.
வைகை ஆற்றில் இருந்து பார்த்திபனூர் இடது பிரதான கால்வாய் மூலம் ஏராள மான கண்மாய்களுக்கு  தண்ணீர் கொண்டு வர கால்வாய்கள் உள்ள நிலையில் முறையாக துார் வாராமல் உள்ளதால் விவசாய நேரத்தில்  ஏராளமான கண்மாய்களுக்கு தண்ணீர்  செல்லாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

