/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பழையூர் ஊருணி துார் வாரும் பணி ஆய்வு செய்ய வலியுறுத்தல்
/
பழையூர் ஊருணி துார் வாரும் பணி ஆய்வு செய்ய வலியுறுத்தல்
பழையூர் ஊருணி துார் வாரும் பணி ஆய்வு செய்ய வலியுறுத்தல்
பழையூர் ஊருணி துார் வாரும் பணி ஆய்வு செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூன் 21, 2025 11:34 PM

திருப்புவனம்: திருப்புவனம் பழையூர் யானைப்பாதை ஊருணி துார்வாரும் பணி திட்டமிட்டபடி நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்புவனம் பழையூர் ரயில்வே கேட் அருகே யானைப்பாதை ஊருணியில் 20 வருடங்களுக்கும் மேலாக பூங்காநகர், சேதுபதிநகர், பாக்யாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு நிலவி வந்தது.
ஊருணி கரையைச் சுற்றிலும் பலரும் ஆக்கிரமித்து இருந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அம்ரூத் திட்டத்தின் கீழ் 59 லட்ச ரூபாய் செலவில் ருணி துார் வார திட்டமிடப்பட்டது.
திருப்புவனம் பழையூர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா உள்ளிட்டவை இல்லாததால் ஊருணியைச் சுற்றிலும் 452 மீட்டர் நீளத்தில் கரை அமைக்கப்பட்டு இரண்டு மீட்டர் அகலத்திற்கு பேவர் பிளாக் கற்கள் பதித்து நடைபாதை உருவாக்கப்படும் என்றும், நடைபாதையில் பத்து இடங்களில் எல்.இ.டி., விளக்குகள், எட்டு குப்பை தொட்டி, இரண்டு இடங்களில் படித்துறை அமைக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்தது.
திருப்புவனம் பழையூர் பகுதி மக்கள் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவர்கள் விளையாடவும் இந்த நடைபாதை பயன்படும் என தெரிவித்தனர்.
ஆனால் 20 வருடங்களாக சாக்கடை நிரம்பிய குளத்தை துார்வாரும் போது அந்த மண்ணை வெளியேற்றி விட்டு புதிதாக செம்மண் அல்லது கிராவல் மண் அமைத்து கரை அமைக்க வேண்டும். ஆனால் சாக்கடை மண்ணால் கரை அமைத்து அதில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க முயன்ற போது சிறு மழைக்கே கரை கரைந்து விட்டது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது.
இதுவரை வந்த கழிவு நீரை வேறு பகுதி வழியாக வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கரையை ஒட்டி கழிவு நீர் தேங்கி கரை வழியாக மீண்டும் ஊருணிக்கு உள்ளே வருகிறது.
மாவட்ட நிர்வாகம் இதுவரை மேற்கொண்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.