/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாயமாகி வரும் வைகை ஆறு நாணல் செடிகளால் பாதிப்பு
/
மாயமாகி வரும் வைகை ஆறு நாணல் செடிகளால் பாதிப்பு
ADDED : டிச 10, 2025 09:04 AM

மானாமதுரை: அரசு வைகை ஆற்றை கண்டு கொள்ளாததாலும், ஐகோர்ட் உத்தரவை முழுமையாக நிறைவேற்றாததாலும் 5 மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு தேனி,திண்டுக்கல்,மதுரை, ராமநாதபுரம்,சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
மதுரை மாவட்டம் விரகனுார் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் மதகு அணை வரை உள்ள ஆற்று பகுதியில் மதுரை, திருப்புவனம், சாயல்குடி, கடலாடி, முதுகுளத்துார், மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களுக்கு மற்றும் 110க்கு மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் 500க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தேவை மற்றும் விவசாய தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்த ஆற்றில் தற்போது எங்கு பார்த்தாலும் கருவேல மரங்களும்,நாணல் செடிகளும் வளர்ந்து மணற்பரப்பே இல்லாமல் கழிவு நீர் ஓடி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. புயல் மற்றும் வெள்ள காலங்களில் வைகை ஆற்றில் பெருமளவு தண்ணீர் சென்றாலும் மணல் கொள்ளை மற்றும் பராமரிப்பு இல்லாத காரணங்களால் கால்வாய்களில் உரிய தண்ணீர் செல்லாமல் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது.
மதுரை ஐகோர்ட் கிளை கடந்த சில வருடங்களுக்கு முன்பு வைகை ஆற்றில் கழிவு நீர் விடுவது மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டுமென்றும் பராமரிப்பு செய்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து ஒரு சில ஊர்களில் மட்டும் கழிவு நீர் விடுவது தடுக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான ஊர்களில் கழிவு நீரை வைகை ஆற்றில் தான் விட்டு வருகின்றனர்.
ஆகவே தமிழக அரசு 5 மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் வைகை ஆற்றை சீரமைத்து கழிவு நீர் மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென 5 மாவட்ட மக்களும், விவசாயிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

