ADDED : ஜூன் 27, 2025 11:52 PM

திருப்புவனம்: ராமநாதபுரம் மாவட்ட பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று சிவகங்கை மாவட்ட எல்லையை வந்தடைந்தது.
ராமநாதபுரம் மாவட்ட இரண்டு மற்றும் மூன்றாம் வைகை பூர்வீக பாசன விவசாயத்திற்காக வைகை அணையில் இருந்து ஜூன் 25ம் தேதி வினாடிக்கு மூவாயிரம் கன அடி வீதம் ஏழுநாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட கண்மாய்களின் பாசன தேவைக்காக திறக்கப்பட்டுள்ள இந்த தண்ணீரை வைத்து 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறும்.
இது தவிர திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுர மாவட்ட வைகை ஆற்றுப்பகுதியில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளின் நீர்மட்டமும் உயரும். 25ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இருநாட்கள் கழித்து நேற்று காலை தான் சிவகங்கை மாவட்ட எல்லையை வந்தடைந்தது. ராமநாதபுர மாவட்ட பாசன தேவை என்பதால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகளின் ஷட்டர்கள் அடைக்கப்பட்டு தண்ணீர் முழுவதும் வைகை ஆற்றினுள் திறக்கப்பட்டுள்ளது.