ADDED : நவ 08, 2025 01:26 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் விதிகளை மீறி வாகனங்களை இணைத்து இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மதுரை நகருக்கு அருகில் திருப்புவனம் அமைந்திருப்பதால் நாளுக்கு நாள் நகர்ப்பகுதி விரிவாக்கமாகி புதுப்புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. கட்டுமான பணிகள் அதிகம் நடப்பதால் கட்டுமான பணிக்கு தேவைப்படும் பொருட்கள், ஆட்களை அழைத்து செல்ல பழைய ஜீப் போன்ற வாகனங்களை வாங்கி அதில் கூடுதலாக இயந்திரங்களை இணைத்து இயக்கி வருகின்றனர்.
கட்டட பணியில் சென்ட்ரிங் அமைக்க கலவை இயந்திரம், ஏணி இயந்திரம் ஆகியவற்றை ஜீப்பில் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருப்புவனம் நகரில் தொடர்ச்சியாக மூன்று வாகனங்களை இணைத்து இயக்குவதால் விபத்து அபாயம் உள்ளது. நெரிசல் மிகுந்த சாலையில் காலை, மாலை என இருவேளை இந்த வாகனங்கள் இயக்கப்படுகிறது.
ரோட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். ரோட்டில் இவர்கள் கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் பாதையில் இந்த வாகனங்கள் இயக்கப்படுகிறது.
முறையாக இணைக்காமல் ஏனோதானோ என இணைக்கப்பட்ட வாகனங்கள் எப்போது வேண்டுமானாலும் கழன்று விழும் அபாயத்தில் ரோட்டில் இயக்கப்படுகிறது. பெரும்பாலான இந்த வாகனங்கள் உரிய உரிமம் இன்றி ரோட்டில் இயக்கப்படுவது குறித்து யாரும் கண்டு கொள்வது கிடையாது.
எனவே விபத்து ஏற்படும் முன் ரோட்டில் இந்த வாகனங்களை போதிய பாதுகாப்பின்றி இயக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

