/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கெட்டுப்போன இறைச்சி விற்பனை; சிங்கம்புணரியில் பாதிக்கப்பட்டவர் புலம்பல்
/
கெட்டுப்போன இறைச்சி விற்பனை; சிங்கம்புணரியில் பாதிக்கப்பட்டவர் புலம்பல்
கெட்டுப்போன இறைச்சி விற்பனை; சிங்கம்புணரியில் பாதிக்கப்பட்டவர் புலம்பல்
கெட்டுப்போன இறைச்சி விற்பனை; சிங்கம்புணரியில் பாதிக்கப்பட்டவர் புலம்பல்
ADDED : டிச 15, 2024 07:31 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி நகரில் கெட்டுப்போன ஆட்டிறைச்சிகளை விற்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.
இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 15க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி கடைகள் செயல்படுகின்றன. வாரச்சந்தை வளாகத்தில் உள்ள ஆடு அடிக்கும் தொட்டியில் தினமும் பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலையில் ஆடுகளை பரிசோதித்து அறுத்து முத்திரை வைத்த பிறகே கடைகளில் தொங்கவிட்டு விற்க வேண்டும்.
ஆனால் பலர் வெளியிலிருந்து அறுத்துக் கொண்டு வரும் ஆடுகளை முத்திரை இல்லாமல் விற்கின்றனர். இறந்த ஆடுகளையும், நோய் தாக்கிய ஆடுகளையும் குறைந்த விலைக்கு வாங்கி வந்து சிலர் வெட்டி விற்பதாக புகார் உள்ளது.
இறந்து பல மணி நேரம் ஆன இறைச்சியை சாப்பிடும் மக்களுக்கு பல்வேறு உபாதை ஏற்படுகிறது.
ஜெ.தாண்டவன், பருவப்பட்டி: மேலுார் ரோட்டில் உள்ள ஒரு கடையில் ஆட்டிறைச்சி வாங்கி வந்து, சமைத்த போது கறியில் நுரையும், துர்நாற்றமும் அடித்தது. கடைக்காரரிடம் கேட்டதற்கு முறையான பதில் இல்லை.
தொங்க விடப்பட்டிருந்த இறைச்சியில் பேரூராட்சி முத்திரையும் இல்லாமல் இருந்தது. ஏற்கனவே கடந்த மாதம் ஆட்டிறைச்சி வாங்கி சமைத்ததில் வீட்டில் அனைவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டோம். நகரில் சில கடைகளில் இறந்த ஆடுகளையும், நோய்வாய்ப்பட்ட ஆடுகளையும் வெட்டி விற்கிறார்கள். இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் அளித்தேன். தாங்கள் வந்து பார்வையிடும் போது குறை இருந்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர், என்றார்.
சிங்கம்புணரி உணவு அலுவலர் (பொறுப்பு) ராஜேஷ் குமாரிடம் கேட்டபோது, கூடுதல் பொறுப்பாக தான் சிங்கம்புணரியை பார்க்கிறேன். தற்போது மூன்று நாட்கள் விடுமுறையில் உள்ளேன். விடுமுறை முடிந்து வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதியை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர் போன் வேறு ஒரு நம்பருக்கு பார்வேர்ட் செய்யப் பட்டிருந்தது.