/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாரிவேட்டை நினைவாக 29 ஆடுகளை பகிர்ந்த கிராமம்
/
பாரிவேட்டை நினைவாக 29 ஆடுகளை பகிர்ந்த கிராமம்
ADDED : மார் 12, 2024 11:40 PM

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே காட்டாம்பூரில் பாரி வேட்டையை' நினைவு படுத்தும் வகையில் 29 ஆடுகளை பலியிட்டு 325 குடும்பங்களுக்கு இறைச்சி வழங்கி பாரி வேட்டை திருவிழா' கொண்டாடினர்.
காட்டாம்பூர் கிராமத்தினர் பலரும் புல்லணி அய்யனார், கருப்பர் உள்ளிட்ட தெய்வங்களை குலதெய்வமாக வணங்குகின்றனர். இவர்கள் பாரம்பரியமாக சிவராத்திரி மூன்றாம் நாளில் வேட்டைக்கு செல்வர். பாரி வேட்டையாக செல்லும் இவர்கள் மறுநாள் வேட்டையாடிய விலங்குகளுடன் வருவது வழக்கம். தற்போது வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. விலங்குகளும் அரிதாகி விட்டது. இதனால் பாரம்பரியத்தை விடாமல் வேட்டையாடச் செல்லும் நிகழ்வு தொடர்கிறது.
மறுநாள் ஊர் மந்தையிலிருந்து பெண்களின் குலவை ஒலிக்க காடு, வயல், கண்மாய் வழியாக புல்லணி அய்யனார் கோயிலுக்கு வந்து தொடர்ந்து பாரி வேட்டை திடலில் கூடுகின்றனர். விலைக்கு வாங்கப்பட்ட 29 ஆடுகளை வெட்டி இறைச்சியை கிராமப் புள்ளி எண்ணிக்கையில் கூறு வைக்கின்றனர். பின்னர் பனை ஓலையில் இறைச்சியை வைத்து கொடுக்கின்றனர். கிராமத்தினர் இறைச்சியுடன் கோயிலில் வைத்து வழிபட்டு, பின்னர் வேட்டையாடி திரும்பும் பாதையில் கிராமத்திற்கு திரும்புகின்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்து அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.

