/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கன் குட்டிகளை தாக்கும் வைரஸ் நோய்.. தவிப்பு!
/
கன் குட்டிகளை தாக்கும் வைரஸ் நோய்.. தவிப்பு!
ADDED : நவ 05, 2025 12:30 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் பகுதி கிராமங்களில் கொரோனாவிற்கு பின் கன்று குட்டிகளை தாக்கும் வைரஸ் ' பெரியம்மை' நோயால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் வைரஸ் தாக்குதல் தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.
திருப்புத்துார் பகுதியில் பரவலாக மழை பெய்யத் துவங்கியதும் கீழச்சிவல்பட்டி, திருக்களாப்பட்டி,கொளுஞ்சிப்பட்டி, பட்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் கன்றுக்குட்டிகளுக்கு காலில் வீக்கம் ஏற்படுவதும், சில நாட்களில் காய்ச்சலுக்குள்ளாகி இரை எடுக்காமல் தவிப்பதுமாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த நோய்த் தாக்குதலை கிராமத்தினர் அம்மை நோய் என்கின்றனர். இந்த நோய் தாக்குதல் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பின்னரே கால்நடைகளுக்கு வருவதாக கூறுகின்றனர்.
கொரோனா தாக்குதல் முடிந்த அடுத்த ஆண்டில் இந்த அம்மை நோய் மாடுகளை மட்டும் தாக்கியுள்ளது.
மறு ஆண்டிலிருந்து கன்றுக் குட்டிகளை மட்டுமே இந்த நோய் தாக்கி வருகிறது. துவக்க ஆண்டில் இந்த அம்மையால் பல மாடுகள் இறந்தன. தற்போது மாடுகள்,கன்றுகள் இறப்பது அரிதாகி உள்ளது.
சிகிச்சைக்கு கட்டுப்பட்டாலும் குணமாக 15 நாட்களாகிறது. ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் மிளகு, திப்பிலி, வெற்றிலை உள்ளிட்ட மூலிகை கலந்து கன்றின் நாக்கில் தடவி இயற்கை வைத்தியமும் செய்து சமாளிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட கிராமத்தினர் கூறுகையில், '3 ஆண்டுகளுக்கு முன் முதலில் இந்த நோய் தாக்கும் போது மாடு உடல் முழுவதும் வீக்கம் வந்தது. இப்போது மாடுகளை தாக்குவதில்லை.
நான்கு மாதம் முதல் ஒன்றரை வயது வரையிலான கன்றுக்குட்டிகளை மட்டுமே தாக்குகிறது. முதலில் கால் இரண்டிலும் வீங்குகிறது. பின்னர் பரவலாக கொப்புளங்கள் வருகிறது. சில நாட்களில் காய்ச்சல் வந்து சாப்பிட முடிவதில்லை. புண் உடையாமலிருந்தால் நல்லது.
கொப்புளம் உடைந்து விட்டால் அரிப்பு ஏற்பட்டு புண் பெரிதாகி ஆற கால தாமதமாகிறது. இதற்கென பிரத்யேகமான தடுப்பூசி இருந்தால் நல்லது. மேலும், சனி,ஞாயிறு தினங்களில் கால்நடை மருத்துவர்கள் இல்லாமல் சிரமமாக உள்ளது. விடுமுறை தினங்களில் மருத்துவர் தங்க தேவையான ஏற்பாட்டை கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர். கால்நடைத் துறையினர் கூறுகையில், 'கால்நடைகள் உலகளவில் கொண்டு செல்ல தற்போது போக்குவரத்து வசதி அதிகரித்து உள்ளது. அப்படி ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதியான கால்நடைகள் மூலம் வந்திருக்கலாம்.
பல நாடுகளில் 3 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த வைரஸ் தாக்குதலால் நோய் வந்துள்ளது. இது பெரியம்மை நோயாகும்.
கொசு மூலம் இந்த வைரஸ் தற்போது கால்நடைகளுக்கு பரவுகிறது. குறிப்பாக கன்றுக்குட்டிகளை பாதிக்கிறது. இதற்கான எல்.எல்.டி. தடுப்பு மருந்து நான்கு மாத கன்றுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை போடப்படுகிறது. தற்போது, நான்கு மாதத்திற்கு குறைவான சிறு கன்றுகுட்டிகள் அதிகமாக பாதிக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன் இருந்து வீரியம் தற்போது இல்லை.
தாய் மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, அதிகரிக்க இந்த நோய் குறிப்பிட்ட ஆண்டுகளில் முற்றிலுமாக குறைந்து விடும்.முன்னெச்சரிக்கையாக கன்றுக்குட்டிகளை பாதுகாக்க கொசுக்கள் வளராமல் தவிர்க்க தண்ணீரை தேங்க விடக்கூடாது. கொசுவலைகளில் தங்க வைக்கலாம்.' என்றனர்.
இந்த புதிய வைரஸ் நோய்க்கான பிரத்யேக வீரியமான தடுப்பூசி போடப்பட வேண்டியது அவசியமாகும். மேலும், தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்த கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

