/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்ணாடி அருங்காட்சியமாக மாறும் கீழடி பார்வையாளர்கள் எதிர்பார்ப்பு
/
கண்ணாடி அருங்காட்சியமாக மாறும் கீழடி பார்வையாளர்கள் எதிர்பார்ப்பு
கண்ணாடி அருங்காட்சியமாக மாறும் கீழடி பார்வையாளர்கள் எதிர்பார்ப்பு
கண்ணாடி அருங்காட்சியமாக மாறும் கீழடி பார்வையாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 17, 2025 07:54 AM

கீழடி : கீழடியில் அமைய உள்ள திறந்த வெளி அருங்காட்சியகம் கண்ணாடி அருங்காட்சியகமாக அமைக்கப்பட உள்ளதையடுத்து சுற்றுலா பயணிகளிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கீழடியில் முதல், இரண்டாம், நான்காம், ஆறாம் கட்ட அகழாய்வு நடந்த இடங்களை திறந்த வெளி அருங்காட்சியகமாக நான்கரை ஏக்கர் பரப்பளவில் 914 சதுர மீட்டரில் 17 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து பணிகள் நடந்து வருகின்றன.
தொல்லியல் துறை ஆய்வு செய்த இடங்களை மீட்டெடுத்து பொருட்களை பாதுகாப்பாக சுற்றுலா பயணிகள் காணும் வண்ணம் காட்சிப்படுத்த தமிழக தொல்லியல் துறை இயக்குனர் ரமேஷ் ( கீழடி பிரிவு), இணை இயக்குனர் அஜய்குமார் தலைமையில் ஏராளமானோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொருட்களை முழுமையாக வெளி கொணர்ந்த பின்னர் பொதுப்பணித்துறையினர் கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
கீழடியில் மத்திய தொல்லியல் துறை ஆய்வில் செங்கல் கட்டுமானம் கொண்ட தொழிற்சாலையின் மேல்தளம் தண்ணீர் உள்ளே வரவும், வெளியே செல்லவும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு, உறை கிணறுகள், தொட்டிகள் உள்ளிட்டவைகளும், தமிழக தொல்லியல் துறை அகழாய்விலும் செங்கல் கட்டுமானம், உலர் கலன், தமிழகத்திலேயே மிகப்பெரிய 33 அடுக்கு உறைகிணறு உள்ளிட்டவைகளும் கண்டறியப்பட்டன.
திறந்த வெளி அருங்காட்சியகத்தை கண்ணாடி அருங்காட்சியகமாக மாற்ற தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. அகழாய்வு பெரும்பாலும் 10 மீட்டர் நீள அகலம், ஆழத்திலும் நடத்தப்பட்டது. தற்போது கண்ணாடி அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ள நிலையில் பொருட்களின் நீள, அகலம், உயரத்திற்கு ஏற்ப காட்சிப்படுத்த உள்ளனர்.
பொருட்களைச் சுற்றிலும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேற்புறம் கண்ணாடி அமைத்து மூடப்பட்டு பொதுமக்கள் வெகு அருகில் நின்று பார்வையிடும் வண்ணம் அமைக்கப்பட உள்ளது.
கன்னியாகுமரியில் கடல் மேல் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலம் போன்று கீழடியிலும் கண்ணாடியால் ஆன அருங்காட்சியகம் அமைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கண்ணாடி அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட பின் கீழடிக்கு வரும் உள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.