ADDED : ஆக 26, 2025 11:49 PM

காரைக்குடி; கண்டனுார் பேரூராட்சியில் ஆடுவதைக் கூடத்தை விடுத்து திறந்த வெளியில் ஆடுகள் வெட்டப்படுவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது.
கண்டனூர் பேரூராட்சியில் ஆடு, கோழி, மீன் கடைகள் என 100க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. சாலை ஓரங்களில், மீன்கடைகள், இறைச்சி கடைகள் அதிகரித்து வருகிறது. கண்டனுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே ஆடுவதைக்கூடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. சுகாதார அலுவலர்கள் மேற்பார்வையில் ஆடுகளை பரிசோதனை செய்த பிறகு ஆடுகள் அறுக்கப்பட வேண்டும்.
மேலும் வெட்டப்பட்ட இறைச்சியின் மீது சுகாதாரமான இறைச்சி என்பதற்கு அடையாளமாக முத்திரை இடப்படும். ஆனால் பல இறைச்சிக் கடைகளில் ஆடுவதைக் கூடத்திற்கு கொண்டு செல்லாமல் ஆங்காங்கே ஆடுகளை அறுத்து விற்பனை செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது. பேரூராட்சி நிர்வாகம் இதுகுறித்து கண்டும் காணாமல் உள்ளது.